பள்ளி ஆசிரியருக்கான மேலாண்மை திறன்வளர் நிகழ்வு

கோவை கே.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் (26.11.2021 மற்றும் 27.11.2021 ) இரண்டு நாட்கள் பள்ளி ஆசிரியர்களுக்கான “மேலாண்மை திறன் வளர்” நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து வழங்கியது.

கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா தலைமையுரையும் கே.பி.ஆர் கலை கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வாழ்த்துரையும் வழங்கிச் சிறப்பித்தார்கள். முதல் அமர்வின் சிறப்பு விருந்தினராகக் கல்வியாளர்கள் சங்கமத்தின் நிறுவனர், எழுத்தாளர் சதீஷ்குமார் கலந்துகொண்டு “கேள்விகளால் ஒரு வேள்வி” எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார். ஆசிரியர்களிடையே 9 வினாக்கள் எழுப்பியும் அதற்கான ஏற்புடைய விடையையும் பகிர்ந்து நிறைவு செய்தார்.

இரண்டாம் அமர்வில் சிறப்பு விருந்தினராகச் சென்னை, தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் பஞ்சநாதம் கலந்துகொண்டு “வகுப்பறைச் சூழல்” குறித்து சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து கே.பி.ஆர் கலை கல்லூரி கல்விசார் முதன்மையர், பேராசிரியர் சரவணபாண்டி கலந்துகொண்டு L.K.G(Learning-Knowledge-Guru) எனும் தலைப்பில் கற்றல், தெளிதல் குறித்து சிறப்புரை வழங்கினார். நிகழ்வின் நிறைவில் “கற்பித்தலில் உள்ள சவால்கள்-கலந்துரையாடல்” அமர்வு அமைந்தது.

உயிரியல் மருத்துவப் பொறியியல் துறையின் தலைவர் கணேஷ் குமார் சிரப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் 60 க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.