இ ஸ்கூட்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு: தமிழகத்தில் 2வது ஆலையை அமைக்கும் ஏத்தர்

இ.ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஏத்தர் நிறுவனம், ஓசூரில் தனது 2வது ஆலையை அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், மக்களின் புதிய தேர்வாக இ.ஸ்கூட்டர்கள் உள்ளதோடு இதனை வாங்க மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பெட்ரோல், டீசலுக்கு ஆகும் செலவு குறைவும் என்று கூறப்படும் நிலையில் பலரும் இ.ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இ.ஸ்கூட்டருக்கான தேவை அதிகரித்து வருவதால் Ather Energy, ஓலா (Ola) ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது ஆலைகளை அமைத்து முழு வீச்சில் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஓசூரில் கடந்த பிப்ரவரி மாதம் 1.23 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.635 கோடி முதலீட்டில் இந்தியாவின் முதல் நவீன மின்சார இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியது. தற்போது Ather 450 Plus மற்றும் Ather 450X இ.ஸ்கூட்டர்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால் ஓசூரில் தனது 2வது உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளதாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது ஆண்டுக்கு 1.20 லட்சம் இ.ஸ்கூட்டர்களை தயாரிக்கும் அளவில் ஏத்தர் நிறுவனத்தில் திறன் உள்ளது. புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது, இந்த திறன் ஆண்டுக்கு 4 லட்சம் இ.ஸ்கூட்டர்களாக அதிகரிக்கும். 2வது ஆலை அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அந்நிறுவனம் 650 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது.

ஏதர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய ஆலை லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்பில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2020ம் ஆண்டு நவம்பருக்கு பின்னர் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் Ather 450 Plus மற்றும் Ather 450X இ.ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.