பேட்டரி மூலம் இயங்கும் இ- பைக்: என்.ஜி.பி மாணவர்களின் புதிய முயற்சி

என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் மின்சார பேட்டரி மூலம் இயங்கும் கிராவிற்றான் என்ற இ- பைக்கை உருவாக்கி வடிவமைத்துள்ளார்கள்.

கல்லூரியின் தலைவர் நல்ல ஜி.பழனிசாமி, செயலாளர் தவமணி பழனிசாமி, முதன்மை செயலாளர் புவனேஸ்வரன், மற்றும் கல்லூரியின் முதல்வர் பிரபா, மற்றும் கல்லூரியின் மெக்கானிக்கல் துறைத் தலைவர் நந்தகுமார் ஆகியோரின் வழிகாட்டுதலில் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் கிரிப்பின் சிங், கோகுலகிருஷ்ணன், தீன் பிரதீமன் ஆகியோர்களால் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் எண்ணக் கனவுகளை செயலாக்கும் பொருட்டு இந்த இ- பைக் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உபயோகத்தில் உள்ள மின்சார பேட்டரி வாகனங்களில் திரவ குளிரூட்டும் அமைப்பு இல்லை. மற்ற பேட்டரி வாகனங்களை போல் அல்லாமல் இதில் திரவ  குளிரூட்டும் அமைப்பு பொருத்தப்பட்டு மோட்டாரின் வெப்பம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேட்டரியின் அதிகபட்ச திறன் தொடர்ச்சியாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த கிராவிற்றான் இ- பைக் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க முடியும். மிகக் குறைந்த நேரத்தில் அதாவது 2  1/2 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்த பட்சம் 50 கிலோமீட்டர்கள் வரை இடைவிடாமல் இயங்க கூடியது. மேலும் இந்த வாகனத்தின் மூலம் காற்று மாசுபடுதல் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது.