அச்சுறுத்தும் மருத்துவக் கழிவுகள்

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் மழையின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. இந்த  மழையைப் பற்றிய செய்தியோடு செய்தியாக ஒரு நிகழ்வு வெளி வந்திருக்கிறது. அதாவது இந்த மழை நீருடன் சேர்ந்து மருத்துவக் கழிவுகளும் செல்லும் வகையில், மருத்துவக் கழிவுகளை கொட்டச் சென்ற இரண்டு டிராக்டர்கள் பிடிபட்டு  இருக்கின்றன. கேரளப் பகுதியில் இருந்து தமிழ்நாடு எல்லைக்குள் அடிக்கடி இது போல மருத்துவக் கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள் வருவது வழக்கம். அரசு இது குறித்து மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த மருத்துவக் கழிவுகளால் உருவாகும் ஆபத்து குறித்து யாருக்கும் முழுமையாக தெரியாது. சொல்லப்போனால் உலக அளவில் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட மருத்துவக் கழிவு ஒழிப்பு தொழில்நுட்பம் கிடையாது என்றே கூறலாம். குப்பையை எரித்தாலும் கூட சாகாமல் உயிர் வாழும் பாக்டீரியாக்கள் உண்டு. இந்தியா போன்ற நகரமயமாதல் அதிகமாக உள்ள  நாடுகளில் இது ஒரு பெரிய சிக்கலை உருவாக்கி வருகிறது. பொதுவாக  நகர குப்பைகள் அதிகமாகி வருவதால் அவற்றை எவ்வாறு அகற்றுவது என்று உள்ளாட்சி அமைப்புகள் விழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றன. இதில்  மருத்துவக் கழிவுகளும் சேரும் பொழுது சிக்கல் அதிகமாகிறது.

உலகமெங்கும் குப்பையை அது உருவாகும் இடத்திலேயே பிரித்து அகற்றுவதுதான் முறையாக உள்ளது. ஆனால் குப்பையை அப்படியே எடுத்து வீசுவது தான் நமது பண்பாட்டில் இருக்கிறது. அதை முதலில் மாற்ற வேண்டும். குப்பையிலும் பல வகைகள் உண்டு. அவற்றுக்கு ஒவ்வொரு தனி குணம் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இப்பொழுது புதிதாக சேர்ந்துள்ள மருத்துவக் கழிவு, மின்னணு சாதன கழிவு ஆகியவற்றை துறை சார்ந்தவர்கள் மட்டுமே சரியான முறையில் அகற்ற முடியும். இல்லையெனில் அது நிலம், நீர், காற்று என அனைத்தையும் மாசு படுத்திவிடும். மேலும் இங்கு இன்னும் குப்பையை பல இடங்களில் மனிதர்கள் தான் கையாளுகிறார்கள். இந்த மருத்துவக் கழிவுகள் அவர்கள் உடல் நலத்திலும் சிக்கலை உருவாக்கக்கூடும்.

இவையெல்லாம் போக நமது உள்ளாட்சி அமைப்புகளில் இந்த குப்பை மேலாண்மைக்கு  என தகு‌ந்த திட்டமும், நிதியோ, தொழில்நுட்பமே கிடையாது. இப்போது வரை எங்காவது ஓரமாக கொண்டு போய்தான் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மருத்துவக் கழிவு என்பது அப்படி அல்ல.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மருத்துவக் கழிவு என்பது, ஒன்றும் அறியாத பாமர மக்களால் உருவாக்கப்படுவது அல்ல. மிகவும் படித்த அறிவுள்ள மருத்துவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து உருவாவது தான் இந்த மருத்துவக் கழிவுகள் ஆகும். ஒரு உயிரைக் காப்பாற்ற சிகிச்சை அளிப்பதற்காக தேடித்தேடி அறிவு அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு வரும்பொழுது, இருக்கின்ற அறிவாற்றலும் பொறுப்பும் அதை பயன்படுத்தி முடித்தவுடன் தூக்கி வீசும் பொழுது காணாமல் போய்விடுகிறது. மேலும் இது அனைவருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் என்பது போல சாதாரண  குப்பைகளுடன் மருத்துவக் கழிவு கலந்து சிக்கலை உருவாக்கலாம்.

எனவே அரசு இது குறித்து துறை சார்ந்த விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும். மருத்துவமனை வளாகங்கள் என்பவற்றில் இருந்து தான் இந்த மருத்துவக் கழிவுகள் உருவாகின்றன. எனவே அவர்களிடம் தகுந்த முறையில் இதை எவ்வாறு அகற்றுவது என்பதற்கான விழிப்புணர்வு செயல் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.  அப்பொழுதுதான் பொதுவான குப்பையிலிருந்து இந்த மருத்துவக் குப்பைகளை பிரித்து அகற்ற முடியும்.