1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுமா தமிழகம்?

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி ஏற்ற ஆறு மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக கோவைக்கு வந்து சென்றிருக்கிறார். முதல்முறை கோவிட் 19 பாதிப்புகளைப் பார்ப்பதற்காக வந்து சென்றார். இரண்டாவது முறையாக வந்திருப்பது தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக தொழில் பொருளாதாரத் துறையைப் பொறுத்தவரை இது மூன்றாவது மாநாடு.  கடந்த ஜூலை மாதம் ஒரு முதலீட்டாளர் மாநாடு,  அடுத்து செப்டம்பரில் ஒரு ஏற்றுமதியாளர் மாநாடு,  தற்பொழுது நவம்பரில் மீண்டும் ஒரு முதலீட்டாளர் மாநாடு என்று தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள், தமிழக அரசு இங்கு தொழில் பொருளாதார நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பதைக் காட்டுகிறது.  இதில் குறிப்பாக மூன்றாவது மாநாடு கோவையில் நடைபெற்றது சிறப்புக்குரியது.

மொத்தம் 59 தொழில் நிறுவனங்கள்,  35 ஆயிரத்து 208 கோடி முதலீட்டுக்கு இங்கு  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இவை அல்லாமல் 485 கோடி முதலீட்டில் சுமார் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 7 வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலைகள் கொண்ட ஒரு வான்வெளி தொழில் பூங்காவையும் இங்கே உருவாக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்.  இவை எல்லாம் ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி தமிழகம் செல்வதற்கான செயல் திட்டத்தின் ஒரு பகுதி என்று அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

கூடுதலாக காஞ்சிபுரம்,  கிருஷ்ணகிரியைப் போல மின்னணுவியல் துறையிலும் கோவை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று டிப்ஸ் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் இந்தியாவின் ஏற்றுமதியில் 25 சதவீத மின்னணுவியல் துறை சார்ந்த ஏற்றுமதியை தமிழ்நாடு இலக்காக கொண்டு செயல்படுவதையும் குறிப்பிட்டிருக்கிறார்.  கூடவே கோவையின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான தங்க நகை தொழில் குறித்தும் இங்கு தங்க நகை தொழில் வளாகம் ஒன்றை உருவாக்குவதற்கான திட்டத்தையும் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழில் நகரமாக கோவை திகழ்கிறது. என்றாலும் இப்பகுதி இயற்கையான தொழில் வாய்ப்புகள் பெற்ற ஒரு பகுதி அல்ல. கடந்த நூற்றாண்டில் பஞ்சாலை, மோட்டார் பம்ப தொழிற்சாலைகள்,  பவுண்டரி என்று வளர்ந்து வந்திருந்தாலும் இந்த தொழில் சார்ந்தவர்கள் பெரும் நிறுவனங்களும் அல்ல; பெருமுதலாளிகளும் அல்ல.

இங்கு உள்ள தொழில் நிறுவனங்களில் மிகப் பெரும்பாலானவை சிறு தொழில் முனைவோர்கள் மூலம் உருவாக்கப்பட்டவை. அந்த வகையில் அதற்கே உரித்தான பல சிக்கல்கள் இங்கே இருக்கின்றன. அதுவும் குறிப்பாக  கொரோனா கால கட்டத்தில் இங்கே தொழில்துறை எதிர்கொண்ட சிக்கல்கள் ஏராளம் ஆகும். ஏனென்றால் திறன்மிகு தொழிலாளர்கள் பற்றாக்குறை,  நிதிப்பற்றாக்குறை,  மூலப்பொருள் விலை ஏற்றம் என்று பல வகையிலும் இங்கே சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டன.  அவற்றில் இருந்து வெளிவந்து மீண்டும் தொழிலை நடத்தி நிலை பெறுவது என்பதற்கு கண்டிப்பாக அரசாங்கத்தின் ஆதரவு தேவை.

இங்கே கேட்கும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் மதுரை, திருச்சி போன்ற இடங்களில் கேட்கும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. ஏனென்றால் மற்ற மாவட்டங்களில் இருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும் இங்கே வந்து பணியாற்றும் தொழிலாளர்கள், மூலப்பொருட்கள், போக்குவரத்து என்று பலவகையான தொழில் சார்ந்த கூறுகள் இங்கு அதிகம்.

அந்த வகையில் கோவைக்கு தமிழக அரசு உட்கட்டமைப்பு வசதிகளை சரியான முறையில் செய்து கொடுப்பது கோவையின் வளர்ச்சி மட்டுமல்ல,  ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

சில வளர்ந்து வரும் தொழில் துறை சார்ந்து, தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இங்குள்ள சிறு தொழில்களுக்கு ஆதரவு தர வேண்டியது கடமையாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்களுக்கு இங்கே தொழிற்பேட்டைகள் உருவாகி வருகின்றன. அரசின் சார்பிலும் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.  அதற்கு முன்பாகவே இங்கு உள்ள பாதுகாப்பு துறை சார்ந்த தொழில்களுக்கு  சிறு குறு தொழில் வளாகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இங்கே ஆதரவு கேட்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். ஏனெனில் இன்றைய சூழலில் மூலப்பொருள் விலை ஏற்றம், நிதிப்பற்றாக்குறை,  திறன்மிகு தொழிலாளர்களை வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வருவது, ஏற்றுமதி சார்ந்த சிக்கல்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கிறது.  இந்த நிலையில் இங்கே என்ன தேவையோ அதை மத்திய அரசிடம் கேட்டு பரிந்துரைத்து பெற்றுத் தர வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

ஆனால் அதே நேரத்தில் இங்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவது,  ஒற்றைச்சாளர அனுமதி,  அதுபோக திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்வது என்பதெல்லாம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

சிறு தொழில்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இரண்டாம் நிலை நகரங்களில் தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் போது இங்கு தொழில் வளர்ச்சி பெருகும். அப்பொழுதுதான்  ஒரு ட்ரில்லியன் வளர்ச்சி இலக்கு என்ற கனவு எட்டப்பட்டு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி உருவாகும்.

மேலும் தொழில் வளர்ச்சி குன்றிய பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைப்பது போல, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது போல தொழில் வளர்ச்சி பெறுவதற்கான அடிப்படை கட்டமைப்பு உள்ள கோவை போன்ற பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக ஒரு சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்து நேரடியாக வளர்ச்சியை தமிழக அரசு கண்காணித்து அதற்கான ஒத்துழைப்பை வழங்குவது இப்பகுதி பொருளாதார வளர்ச்சியில் மேம்பட மிகவும் உதவும்.