உள்ளங்கை அதிகமாக வியர்க்கிறதா?

சிலருக்கு உள்ளங்கையில் வியர்வை வருவதை நாம் கண்டிருப்போம். உள்ளங்கையில் வியர்வை வருவது ஒரு சங்கடமான விஷயமாக இருப்பதோடு, குறிப்பாக யாருக்கேனும் கை குளுக்கக் கூட நாம் முன் வர மாட்டோம். பேனா பிடித்து எழுத முடியாது. எழுதினாலும் அந்த பேப்பர் வியர்வை ஈரம் பட்டு நனைந்துவிடும். மற்றவர்களுக்கும் நம்மை பார்க்கும்போது சங்கடத்தை உண்டாக்கும். இதனால் அவர்களுடைய சுய நம்பிக்கையையே இழக்கக் கூடும். அதீதமாக சிலர் இதனால் தனிமையைக் கூட விரும்புவார்கள். இப்படி உடல் ரீதியாக மட்டுமன்றி மன ரீதியாகவும் பாதிக்கிறது.

அப்படி உங்கள் உள்ளங்கையில் வடியும் வியர்வை எதனால் என்பதை தனது யூடியூப் பக்கத்தில் விளக்குகிறார் தோல் நிபுணர் ரெனிடா ராஜன்.

உள்ளங்கையில் வியர்வை வழிவதை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். அவை பிரைமரி ஹைப்பர்ஹைட்ராசிஸ், மற்றும் செகண்டரி ஹைப்பர்ஹைட்ராசிஸ்.

பிரைமரி ஹைப்பர்ஹைட்ராசிஸ் என்பது சாதாரணமானது. இது குழந்தையிலிருந்தே மரபணு காரணமாகவோ, பருவ மாற்றம், பதட்டம், கோபம் போன்ற உணர்ச்சி நிலை, சுற்றுச்சூழல் இப்படி சில காரணங்களால் வியர்வை வரும். இது இயல்பானது.

செகண்டரி ஹைப்பர்ஹைட்ராசிஸ் என்பது நோய்களை உணர்த்தும் அறிகுறியாகும். அதாவது தைராய்டு ஹார்மோன் குறைபாடு, நீரிழிவு நோய், போன்ற நோய் காரணங்களாக வரும். இது சற்று தீவிரமானதும் கூட.

இதற்கு ஆண்டிபெஸ்பைரண்ட் (antiperspirant ) என்னும் கிரீம் கிடைக்கிறது. அதை கைகளில் தடவிக்கொண்டால் வியர்வை வெளியேறுவதை தடுக்கும் என்கிறார் மருத்துவர்.

அடுத்ததாக பாட்டலினம் டாக்சின் ( botulinum toxin) என்னும் மருந்து வியர்வையை தடுக்க உதவும் என்கிறார். இது வியர்வை சுரப்பிகளின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தும் என்கிறார். இந்த டிரீட்மெண்ட் 6 முதல் 12 மாதங்கள் வரை தாங்கும் என்கிறார். இந்த சிகிச்சையை யாருக்கு வேண்டுமென்றாலும் பரிந்துரைக்கலாம் என்கிறார்.

மூன்றாவதாக microneedling radio frequency treatment சிகிச்சை செய்யலாம் என்கிறார். இது நிரந்தரமான தீர்வாக இருக்கும் என்கிறார். அதாவது இந்த சிகிச்சையில் வியர்வை சுரப்பிகளை செயலிழக்க வைப்பதாகக் கூறுகிறார்.

மேலே குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் மட்டுமன்றி உங்களுக்கு எப்போதெல்லாம் வியர்வை அதிகமாக சுரக்கிறது. எந்த உணவு சாப்பிட்டால் சுரக்கிறது என்பதை கண்கானிக்க வேண்டும். பின் அந்த விஷயங்களை கட்டுப்படுத்துவது அல்லது தவிர்ப்பது நல்லது.

 

Source: News 18 Tamilnadu