வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் மின்வேலி: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

கோவை மாவட்டம் ஆனைகட்டியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கு மலைத் தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் இப்பகுதியில் யானைகள் , காட்டெருமை, காட்டுப்பன்றிகள் , சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது.

யானை வழித்தடங்கள் அதிகளவில் ஆனைகட்டி பகுதியில்தான் இருக்கிறது. விவசாயத்தை நம்பியிருந்த  மலைவாழ் மக்கள் தற்போது பெருமளவில் விவசாயம் செய்வதில்லை, விவசாய கூலிகளாகவும், நகரத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு பணிக்கு செல்கின்றனர். வனவிலங்குகள் அடிக்கடி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு  உணவு, தண்ணீர் தேடி வருகின்றன. இதனால் ஒரு சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

வனப்பகுதியை ஒட்டி இருக்கும் விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் யானை மனித மோதல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுகவின் காரமடை ஒன்றிய செயலாளர் சுரேந்தர், கண்டிவழி மலைவாழ் கிராமத்திலுள்ள வனத்திற்கு அருகே இருக்கும், தனது நிலத்திற்கு மின்வேலி அமைத்துள்ளார்.  கண்டிவழி நுழைவு வாயிலுள்ள நீரோடையின் தடுப்பணைக்கு அருகேயும், வனத்தை ஒட்டியிருக்கும் பகுதி என இரண்டு இடங்களிலும்,  நீரோடைக்கு குறுக்கே மின்வேலி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வன உயிரினங்கள் மின்வேலியில் பட்டு இறக்கும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யானை வழித்தடங்களில் உள்ள ரிசார்ட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகளை அகற்றவும் வழக்கு தொடரப்போவதாக சமூக ஆர்வலர்கள்  தெரிவித்துள்ளனர்.