ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் கல்லூரி பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதவியல் துறை சார்பில், ‘கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் அடிப்படை அறிவியலின் வாய்ப்பு மற்றும் மேம்பாடு’ என்ற தலைப்பில், கல்லூரி பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி, கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக வளாக மத்திய பாதுகாப்பு அமைச்சக உயிர் அறிவியல் மைய விஞ்ஞானி கதிர்வேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஒரு நாடு வல்லரசாக மாறுவதற்கு மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியம். அவை பொது அறிவு, பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை. நம் நாடு இம்மூன்றிலும் சிறந்து விளங்குகிறது. கூடிய விரைவில் நம் நாடு வல்லரசாகும். இருந்தபோதிலும் இந்தியா முழுவதும் சுகாதாரத் துறையில் முன்னேற்றம் காண்பது அவசியமாகிறது.

இந்நிலையில் ஒவ்வொருவரும் தனித்தனியாக உழைத்தால் வெற்றி பெற முடியாது. குழுவாக உழைக்க வேண்டும். குழு முயற்சியே வெற்றியைத் தேடித் தரும். அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை அறிவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்றவை அடிப்படையாகும். அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினால் தான் வெற்றி பெறுவது எளிதாகும் எனக் கூறினார்.

அதைத்தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பி.எஸ்சி. வேதியியல் மூன்றாமாண்டு மாணவி ஐஸ்வர்யாவுக்கு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் சிறந்து விளங்கியதற்காகவும், கணிதம் மற்றும் கணினி பயன்பாட்டுத் துறை இரண்டாமாண்டு மாணவி ரித்திகா, அகில இந்திய அளவில் எம்டிடிஎஸ் நடத்திய பாடத்தில் தேர்ச்சி பெற்றதற்காகவும், நியூடோனியன் நேஷன் என்ற யூடியூப் சேனல் உருவாக்கிய இயற்பியல் மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் இயற்பியல் துறைத்தலைவர் பூங்குழலி, கணிதத்துறைத் தலைவர் உமா, வேதியியல் துறைத்தலைவர் சசிகலா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி முகாம் வருகிற 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.