பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க.,வினர் உண்ணாவிரதம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து கோவையில் பா.ஜ.க.,வினர் மாட்டு வண்டியில் வந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம், டீசல் லிட்டருக்கு ரூ.10ம் விலை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த விலை குறைப்பு பல்வேறு மாநிலங்களிலும் அமலுக்கு வந்த சூழலில், தமிழகத்தில் இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்த சூழலில், தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அதன்படி கோவை சிவானந்தாகாலனியில் இன்று பாரதிய ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பா.ஜ.க நிர்வாகிகள் மாட்டு வண்டியில் வந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பா.ஜ.க துணை தலைவர் கனகசபாபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் போடபட்ட ஒப்பந்தம் காரணமாக இப்போதும் மத்திய அரசு வட்டி செலுத்தி வருகிறது. இந்த சூழலில் ரூ.9 ஆயிரம் கோடி வருவாயை மத்திய அரசு தற்போது விட்டுக்கொடுக்கும் விதமாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. இது பா.ஜ.க ஆளும் மாநிகங்களிலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் கூட அமலுக்கு வந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அமலுக்கு வரவில்லை. இதனை கண்டித்து தொடர்போராட்டங்கள் நடத்தப்படும்.” என்றார்.