விவசாயிகள் போராட்டம்: வரலாறு சொல்லும் பாடம்!

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளதோடு, வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் திரும்பப் பெறப்படுகிறது எனவும் அறிவித்துள்ளார். இம்முடிவை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து எதிர்கட்சிகள் கருத்துகளும் கூறி வருகின்றன.

“விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டு வந்தோம். ஆனால், அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை. விளக்குவதில் தொடர்ந்து முயற்சி செய்தும் வெற்றி பெற முடியவில்லை. இந்த விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்: தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள் தான் மதிக்கப்பட வேண்டும். இதுவே வரலாறு சொல்லும் பாடம்!உழவர் பக்கம் நின்று போராடியதும், வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமை கொள்ளத்தக்கதாகும். அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து, இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி: இந்த சட்டங்களைத் தொடக்கம் முதலே எதிர்த்து வந்த ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், சத்தியாகிரகத்தின் மூலமும், அநீதிக்கு எதிராகவும் பெறப்பட்ட இந்த வெற்றிக்கு வாழ்த்துகள். இந்திய விவசாயிகள் தங்களது அறவழி போராட்டத்தால் ஆணவத்தை அழித்துள்ளார்கள். விவசாயிகள் வாழ்க என்று கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி: மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், ‘வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை மத்திய பாஜக அரசு கொடுமை செய்தது. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், ஓய்வின்றி போராட்டம் நடத்திய விவசாயிகள் இன்று வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள். போராட்டத்தின் போது உயிரை தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்: இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்தப் போராட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரமரணம் அடைந்தனர். அவர்களது தியாகம் அழியாது இருக்கும். விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற இந்த நாட்டின் விவசாயிகள் தங்கள் உயிரை எப்படிப் பணயம் வைத்திருக்கிறார்கள் என்பதை வரும் தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும். என் நாட்டு விவசாயிகளுக்கு நான் தலைவணங்குகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

கேரளா முதல்வர் பினராய் விஜயன்: ஓராண்டு காலம் நீடித்த விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்திய விவசாயிகள் போராட்டங்களின் வரலாற்றில் பிரகாசமான அத்தியாயங்களில் ஒன்றை எழுதி வைத்துள்ளனர்.

பா. சிதம்பரம்: தேர்தல் அச்சம் காரணமாக மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் வாபஸ் பெற்றுள்ளார். ஜனநாயக முறையிலான போராட்டத்தால் பெற முடியாத வெற்றி, தேர்தல் காரணமாக கிடைத்துள்ளது.

உ.பி. முன்னள் முதல்வர் அகிலேஷ்: “போலியான மன்னிப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது. மன்னிப்பு கேட்டவர்கள் அரசியலில் இருந்து நிரந்தரமாக விலக வேண்டும். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு பின்பு மீண்டும் அந்த சட்டங்களை கொண்டு வருவார்கள். வாக்குகள் மூலம் பாஜகவை தூக்கி எறிவதே விவசாயிகளுக்கு நல்லது.

எடப்பாடி பழனிசாமி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றமைக்கும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்ததற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

பன்னீர்செல்வம்: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த இந்தியப் பிரதமரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதிமுக சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகளின் மேல் அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் நண்பர் என்பது வெட்ட வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

சு.வெங்கடேசன்: விவசாய சட்டங்கள் வாபஸ் என பிரதமர் அறிவிப்பு. மக்கள் சக்தி கோட்டைக் கதவுகளை விட வலிமையானது. போராட்டத்துக்கு புது இலக்கணம் வகுத்து, ஜனநாயக மாண்புகளுக்கு வலு சேர்த்துள்ள விவசாய பெருமக்களுக்கு நன்றிகள் பல. களத்தில் உயிர்நீத்தவர்களின் தியாகம் என்றென்றும் சுடர்வீசும்.

வைகோ: மக்கள் சக்தி மகத்தானது என்பதை விவசாயிகள் நிருபித்துள்ளார்கள். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, போராட்டத்தில் இழந்த உயிர்களைத் திரும்பத் தருவாரா?

திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன்: வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்த ஒன்றிய அரசு தற்போது 5 மாநில தேர்தல் வரும் நிலையில், அவசர அவசரமாக இந்த சட்டத்தைத் திரும்பப் பெறும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் தேர்தல் அரசியல் நடத்துகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பிறகு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.

சசிகலா: பெருந்தன்மையோடு 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி. “கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி” என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டி இந்தியாவில் விவசாய புரட்சி ஏற்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி: மூன்று விவசாய சட்டங்களைத் திரும்ப பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி.

நடிகர் பிரகாஷ்ராஜ்: என் தாய் நாட்டின் இடைவிடாது போராடும் விவசாயிகள், மன்னரை மண்டியிட வைத்துள்ளனர்.