கே.ஐ.டி கல்லூரியில் ஓரியென்டேஷன் ப்ரோக்ராம்

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஓரியென்டேஷன் ப்ரோக்ராம்-ஃபியூச்சர் என்ஜினீயரிங் (ORIENTATION PROGRAMME-FUTURE ENGINEERING) என்ற தலைப்பில் கல்லூரியில் புதன்கிழமையன்று நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கெரியர் கன்சல்டன்ட் (CAREER CONSULTANT) ஜெயப்பிரகாஷ் காந்தி கலந்து கொண்டார்.

அவர் மாணவர்களிடம் உரையாடிய போது, இந்தியா இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது சில குறிப்பிட்ட தொழில்களின் வளர்ச்சி பெரும்பங்கு வகிக்கிறது.

அதில் முக்கிய இடத்தில் பொறியியல் தொழில்நுட்பத் துறை உள்ளது. அத்தகைய பொறியியல் தொழில்நுட்பத் துறை இன்று அசாதாரண வளர்ச்சியை கண்டுள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மின்சார வாகன உற்பத்தி, மென்பொருள், நிதி ஆலோசனை போன்ற தனியார் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ARTIFICIAL INTELLIGENCE) ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது.

அனைத்துமே தொடக்க நிலையில் இருப்பதால் செயற்கை நுண்ணறிவின் அடுத்தக் கட்ட வளர்ச்சியை ஆராய்ந்து, அதற்கேற்ப திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அடிப்படைக் கணினி அறிவியல், பொறியியல் படிப்புகளுடன் ஆழ்நிலைக் கற்றல் (Deep Learning), இயந்திரக் கற்றல் (Machine Learning) போன்றவை செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு பாதை அமைத்துத் தரும் என்று கூறினார்.

பொறியியல், மருத்துவம், வேளாண்மை, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் செயற்கை நுண்ணறிவை ஈடுபடுத்தி மேலும் அதிகமான வளர்ச்சியை காண முடியும் என்று கூறினார்.

மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி – வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) போன்ற அரசு நிறுவனங்கள் தொடங்கி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் வரை ஏராளமான நேரடி வேலைவாய்ப்புகள் உள்ளன.

கணினிமயமாக்கம் அனைத்து துறையிலும் நீக்கமற நிறைந்திருப்பதைப் போன்று, அடுத்த பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவும் இடம்பிடிக்கக் காத்திருக்கிறது. அதற்கு இப்போதே தயாராவது நல்லது என்று மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத் தலைவர் இந்து முருகேசன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், பல்வேறு துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.