அறுவை சிகிச்சை பயமா? நம்பிக்கை ஏற்படுத்தும் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி

உலக கதிரியக்கவியல் தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘கதிரியக்கவியல் தினம்’ அனுசரிக்கப்பட்டது. எக்ஸ் ரே கண்டறியப்பட்ட தினமான நவம்பர் 8 ம் தேதி உலக கதிரியக்கவியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி என்பதை மையமாகக் கொண்டு கடைபிடிக்கப்படுகிறது.

ரேடியாலஜி துறையின் கீழ் வரும் மற்றுமொரு பிரிவான இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி மூலமாக அறுவை சிகிச்சையின்றி சிறிய ஊசி மூலமாக நுண்துளை ஏற்படுத்தப்பட்டு நோய் குணமாக்கப்படுகின்றது. பக்கவாதத்தால் ஏற்படும் ரத்தக் குழாய் அடைப்பு, சர்க்கரை நோயினால் ஏற்படும் புண், வெரிக்கோஸ் நரம்பு சுருள் போன்ற நோய்கள்அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்யப்படுகின்றன.

மேலும், பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளி குறித்தும், இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி மருத்துவர்கள் கூறியதாவது:

உயரும் வாழ்நாள்

-டாக்டர் இளங்கோ, நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்

எங்களிடம் சிகிச்சைக்கு வந்தவருக்கு வயிற்றில் இருக்கும் மிகப்பெரிய ரத்தக் குழாயில் வீக்கமும், இடது காலுக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பும் இருந்தது.

முதலில் ரத்தக் குழாயில் உள்ள வீக்கத்தை சரி செய்வதற்காக சிறிய  ஊசி மூலமாக ரத்தக் குழாய்க்குள் Stent Graft கருவியைப் பொருத்தினோம். அதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும். இதனால் வீக்கம் ஏற்பட்டுள்ள பகுதி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்.

இடது காலுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பைச் சரி செய்வதற்காக வலது காலில் உள்ள ரத்த ஓட்டத்தை இடது காலுக்கு எடுத்து வரக் கூடிய வகையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  இதன் மூலம் இடது காலுக்கு தடைப்பட்ட ரத்த ஓட்டம் மீண்டும் சீராகும். இந்த இரண்டு சிகிச்சை முறைகளும் ஒரே நேரத்தில் செய்யப்பட்டன.

நோயாளி உடற்பருமன் கொண்டவராக இருந்ததோடு, நுரையீரல் தொடர்பான பிரச்சினையும் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வது சிக்கலானது. ஒரே சிகிச்சை முறையாக இல்லாமல் தனித் தனியாக பிரித்து வழங்கப்பட்டது. இப்பொழுது நோயாளி நலமாக  உள்ளார்.

“முன்பெல்லாம் நோயாளிக்கு என்ன பிரச்சினை என்பதைக் கண்டறிவதே சவாலானதாக இருக்கும். ஆனால் இப்போதுள்ள  எக்ஸ் ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ போன்ற கருவிகளின் மூலம் என்ன தொந்தரவு என்பதைத் துல்லியமாக கண்டறிய முடிகிறது”

பெருந்தொற்றின் போது நோயாளியின் நுரையீரல் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய சி.டி.ஸ்கேன் கருவியே பெருமளவில் உதவியது. தலை முதல் கால் வரை உள்ள பல நோய்களுக்கு இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி மூலமாக குணப்படுத்தி நோயாளியின் வாழ்நாள் தரத்தை முன்னேற்ற முடியும்.

கட்டுப்பாடு அவசியம்

-டாக்டர் முருகேசன், தலைமை மருத்துவர், கார்டியோ தொராசிக் & வாஸ்குலர் சர்ஜரி

ரத்தக் குழாயில் ஒரு பகுதி மட்டும் அசாதாரணமாக தளர்ந்தால் அதனை அனீரிசம் (மகாதமனி – ரத்தக் குழாய் தளர்ச்சி என்கிறோம்). ரத்த அழுத்தம், புகைப் பழக்கம், வயது மூப்பு போன்ற காரணங்களால் ரத்தக் குழாயில் குறிப்பிட்ட பகுதி தளர்ந்து விடும். இந்த தளர்ச்சி பெரும்பாலும் 80% மகாதமனியில் ஏற்படும். அதிலும் சிறுநீரக ரத்தக் குழாயின் கீழ் இருக்கும் பகுதி அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனை Abdominal Aortic Aneurysm எனக் கூறுவோம்.

இதனால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதால் திறந்த அறுவை சிகிச்சை செய்வது சிக்கலானதாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில் நுண்துளை சிகிச்சை (Interventional) அளிக்கலாம்.

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, புகைப் பழக்கத்தைத் தவிர்த்தல், அதிகமான வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் இல்லமால் இருப்பது போன்றவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உரிய நேரத்தில் சிகிச்சை

-டாக்டர் அனந்த நாராயணன், இருதயம் மற்றும் ரத்தக் குழாய் அறுவை சிகிச்சை நிபுணர்

இந்த நோயாளிக்கு சிக்கலான ரத்தக் குழாய் தொந்தரவு இருந்தது. ஹைபிரிட் டிரீட்மென்ட் முறையை வழங்கினோம். ரத்தக் குழாய் தொடர்பான நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் விரைவில் தெரிய வருவது போல, ரத்தக் குழாய் தொடர்பான தொந்தரவுகள் சீக்கிரம் தெரிய வராது.

இதுபோன்ற நோய்கள் படிப்படியாகவே அதன் பாதிப்பைக் காட்டுவதால், இதை உரிய நேரத்தில் கண்டறிந்து சரியான மருத்துவ சிகிச்சையை வழங்கினால், பெரிய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். நோயின் தன்மை சிக்கலான பின் மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்த்து உரிய நேரத்தில் சிகிச்சைக்கு வரவேண்டும்.

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ரத்தக் குழாய் சிகிச்சை முறைகளுக்கென விரிவான சிகிச்சைத் திட்டங்களும், சிறந்த மருத்துவக் குழுவினரும் உள்ளனர். இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள பல முன்னேற்றங்களால் இது போன்ற சிகிச்சைகளை எளிமையாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது.