பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் பாத பராமரிப்பு மையம் சர்க்கரை நோய்க்கும் கால்களுக்கும் என்ன தொடர்பு?

இந்தியாவில் சர்க்கரை நோயினால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே இருக்க, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயினால் பல நோயாளிகள் தங்கள் கால்களை இழக்கவேண்டிய சூழ்நிலை நேர்ந்து வருகிறது என்பது பரிதாபத்திற்குரிய ஒன்று.

இதைத் தடுக்கவும், சர்க்கரை நோயினால் கால்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கவும் பி.எஸ்.ஜி. மருத்துவமனை தற்போது  பாத பராமரிப்பு மையத்தை, 2021 உலக சர்க்கரை நோய் தினத்தன்று  அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென சிகிச்சை வழங்க அனுபவம் மிக்க நிபுணர் குழுவை மருத்துவமனை நியமித்துள்ளது.

சர்க்கரை நோயினால் கால்கள் எவ்வாறு பாதிப்படைகிறது, இந்நோய் உள்ளவர்கள் தங்கள் கால்களை இழக்காமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி, இதனால் நேரக்கூடிய அனைத்து வகையான கால்கள் தொடர்பான பாதிப்புகளுக்கும் சிறப்பான சிகிச்சை என்னென்ன உள்ளன என்பதையும் இத்துறையின் வல்லுநர்கள் தெரிவித்தனர். அதன் தொகுப்பு வருமாறு :-

கால்களின் ஆரோக்கியமே மகிழ்ச்சி!

-டாக்டர்.வி. ராமமூர்த்தி, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், புனர்வாழ்வு மருத்துவத் துறை

இந்தியாவில் ஒரு தொற்று நோயைப் போல சர்க்கரை நோய் பரவி வருகிறது. 100 பேர் கொண்ட ஒரு குழுவில் 15 பேருக்கு இந்நோய் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. அதிலும், இந்தியா சர்க்கரை நோயாளிகளின் தலைநகரமாக மாறி வருகிறது.

தோராயமாக இந்தியாவில் வருடத்திற்கு ஒரு லட்சம் மக்கள் சர்க்கரை நோயினால் கால்களை இழக்கின்றனர்.

தினசரி மருத்துவமனைக்கு கால் பாதங்களில் தீ வைத்தது போல் எரிச்சல், அதிக தூரம் நடக்க முடியாமை போன்ற காரணங்களால் சர்க்கரை நோயாளிகள் வருகின்றனர்.

பின் விளைவுகள்:

சர்க்கரை நோயினால் ஏற்படும் பின் விளைவுகளை பெரிய ரத்தக் குழாய் பாதிப்பு, சிறிய ரத்தக் குழாய் பாதிப்பு என இருவகையாக பிரிக்கலாம். மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் பாதிப்பினால் பக்கவாதம், இருதய ரத்தக் குழாய் அடைப்பினால் மாரடைப்பு மற்றும் கால்களுக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு உண்டாகி, அதனால் ஏற்படும் புண் ஆறாமல் காலைத் துண்டித்தல் ஆகியவை பெரிய ரத்தக் குழாய் பாதிப்பினால் வரும் பின் விளைவுகள்.

கண்களில் உள்ள சிறிய ரத்தக் குழாய்கள் அடைபட்டு பார்வை இழப்பு, சிறுநீரக ரத்தக் குழாய் அடைப்பினால் சிறுநீரகம் செயலிழப்பு, கால் நரம்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு கால் நரம்புகள் செயல் இழத்தல் ஆகியவை சிறிய ரத்தக் குழாயினால் ஏற்படும் விளைவுகள் ஆகும்.

மேற்கண்ட பின் விளைவுகளில் கால்களுக்கு செல்லும் ரத்தக் குழாய் அடைப்பினால் காலைத் துண்டித்தல் மற்றும் கால் நரம்புகள் பாதிக்கப்பட்டு உணர்ச்சியின்மை, எரிச்சல் இவை இரண்டும் சர்க்கரை நோயினால் கால்களில் ஏற்படும் பாதிப்புகளாக உள்ளன.

சர்க்கரை நோய் பாத பராமரிப்பு மையம்:

இந்நோயினால் ஏற்படும் கால் இழப்பைத் தவிர்ப்பதற்காக உலக சர்க்கரை நோய் தினத்தில்   பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சர்க்கரை நோய் பாத பராமரிப்பு மையத்தைத் தொடங்கியுள்ளோம்.  கால்களை ஆரோக்கியமாக வைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதும், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயினால் ஒருவருக்கு கால் இழப்பு ஏற்படுவதைத் தடுப்பதும் இந்த மையத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

செயல்பாடுகள்:

இந்த மையத்தில் ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழு செயல்படுகிறது. ஒரு சர்க்கரை நோயாளிக்கு காலில் புண் ஏற்படும் போது, பரிசோதனைகளின் முடிவின் அடிப்படையில், அந்த நபருக்கு எவ்விதமான சிகிச்சை வழங்கவேண்டும் என்பதை பாதவியல் நிபுணர்கள் குழு தீர்மானித்து சிகிச்சை வழங்கும்.

சர்க்கரை நோயாளிகள் அணியும் காலணிகள் இந்த மையத்தில் பிரத்தியேகமாக தயாரித்து வழங்கப்படுவதோடு,  எவ்விடத்தில் புண் உள்ளதோ, அந்த இடத்தில் அதன் அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் காலணிகளில் மாற்றம் செய்து தரப்படும்.

சில சமயங்களில் சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களைத் துண்டிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பி.எஸ்.ஜியில் இவர்களுக்காகவே செயற்கைக் கால் தயாரிக்கும் நிலையம் உள்ளது. இரண்டு அல்லது மூன்று வார காலத்திற்குப் பின்பு செயற்கைக் கால் அணிந்து தன் இயல்பான பணிகளை மேற்கொள்ளலாம்.

காலை இழந்து ஊனமுற்றோர் என்ற நிலையை அடையும் போது, அவருக்கு அதற்கான சான்றிதழை எங்கள் மருத்துவக் குழு வழங்குகிறது. இதன் மூலம் அரசு வழங்கும் பல சலுகைகளை பெற முடியும்.

சிகிச்சை முறைகள்:

சர்க்கரை நோயாளிகள் அனைவரும் வருடத்திற்கு ஒருமுறை கால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதிலும் பலவகையான பரிசோதனைகள் உள்ளன. முதலில் கால் ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளதா என்பதை கண்டறிய டாப்ளர் என்ற பரிசோதனை செய்யப்படுகிறது.  இதில் அடைப்பு கண்டறியப்பட்டால் அதை கரைப்பதற்குரிய மருந்தும், அதற்குரிய பயிற்சிகளும் வழங்கப்படும். மேலும், அடைப்பு பெரிதாக இருந்தால் அறுவை சிகிச்சை செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டாவதாக இந்நோய் கொண்டவர்களின் காலில் உள்ள நரம்புகள் பழுதடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதில் ஒரு பகுதியினருக்கு காலில் உணர்ச்சி இல்லாமல் இருக்கலாம் அல்லது கால்களில் எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம். இவர்களின் கால் நரம்பு பாதிப்படைந்துள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனையை வருடத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும்.

மூன்றாவதாக, சர்க்கரை நோயினால் நரம்புகள் பாதிக்கப்படும் போது, பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த அழுத்தத்தைக் கருவி மூலம் கண்டறிந்து, அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் காலணிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

நான்காவதாக சர்க்கரை நோயாளிக்கு பரிந்துரை செய்யும் காலணிகளின் மிருது தன்மை 15 என்ற எண்ணிற்குள் இருக்க வேண்டும். இதை கணக்கிடுவதற்கு டியூரா மீட்டர் என்ற கருவி உள்ளது. இதன் மூலம் சர்க்கரை நோயாளிகள் அணியும் காலணிகள் பொருத்தமானவையா என்பதையும் கண்டறிய முடியும்.

மேற்கூறிய அனைத்து சிகிச்சை முறைகளும் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உள்ள சர்க்கரை நோய் பாத பராமரிப்பு மையத்தில் உள்ளன.

வாழ்க்கை முறை மாற்றம் அவசியம்!

-டாக்டர் சரவணன், தலைவர், மருத்துவத் துறை, பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

சர்க்கரை நோயினால் வரும் கால் பாதிப்புகளில் சிலருக்கு கால் எரிச்சல், மதமதப்பு போன்ற தொந்தரவுகள் முதல் அறிகுறியாக இருக்கும். சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

கால் தோலில் நிறமாற்றம், தோலின் தன்மை மிகவும் தடிமனாக மாறுதல், சிலருக்கு காலை தரையில் வைக்கும் உணர்வே இல்லாமல் இருக்கும் தன்மையை முக்கியமான அறிகுறிகளாக கருத வேண்டும். மேலும் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். அதிலும் நோயின் தன்மை மேலும் அதிகரிக்காமல் காலை அகற்றும் நிலைக்குச் செல்லாமல் இருப்பது முக்கியமான ஒன்று.

கால் நரம்பு மற்றும் ரத்தக் குழாய் பாதிப்பினால் கால் அகற்றப்பட்டு இருந்தால் அதற்கு உண்டான மருந்துகள், கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் போன்றவற்றைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ரத்தக் குழாயில் ரத்த ஓட்டம் மற்றும் நரம்புகள் பிற பகுதிகளுக்கு அனுப்பும் சமிக்ஞைகள் சீராக இருக்கும். மேலும் ரத்தக் குழாயில்  கொழுப்பு படியாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

கால் நரம்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கு சர்க்கரை நோய் மட்டுமே காரணமாக இல்லாமல், ரத்த அழுத்தமும், கொழுப்பும் காரணமாக உள்ளது. எனவே இந்த மூன்றையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். இதன் மூலம் மீண்டும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

இனிப்பைத் தவிர்த்து, கொழுப்பு மற்றும் உப்பு சத்து குறைவான உணவுகளை உண்ண வேண்டும். இதைத் தவிர கால்களுக்கு பயிற்சியும் அளிக்க வேண்டும்.

நவம்பர் 14, சர்க்கரை நோய் தினம் அனுசரிப்பதற்கு முக்கிய காரணம் அதன் தீமைகள் மற்றும் பிரச்சினைகள்  ஒருவரின் வாழ்வையும் அவரின் குடும்பத்தையும் எந்தளவு பாதிக்கும் என்பதைத் தெரியப்படுத்துவதற்கும்  விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் ஆகும்.

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினரின் வாழ்வியல் முறையில் மாற்றம் அடைந்துள்ளதோடு  உடல் உழைப்பு இல்லாத அலுவலகப் பணிகளை மட்டுமே செய்து வருகின்றனர். அதிலும் அவர்கள் உட்கொள்ளும் உணவு வகைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. தினமும் குறைந்தது 45 நிமிடம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல் போன்ற விருப்பப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, துரித உணவுகளைத் தவிர்த்தல் போன்றவை சர்க்கரை நோய் வரும் தன்மையை நிச்சயம் குறைக்கும். மேலும் குடும்பத்தில் சர்க்கரை நோய் வரக்கூடிய தன்மை கொண்ட ஜீன் இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்தால் இந்நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

விரைந்து செயலாற்றுங்கள்!

டாக்டர் இளங்கோ, நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்

உலகிலேயே இந்தியாவில் தான்  சர்க்கரை நோயினால் கால் இழப்பு ஏற்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கால் இழப்பைத் தவிர்க்க, காலில் புண் வராமல் தடுப்பதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளது.

நெடுநாளாக சர்க்கரை நோய் பாதித்தவர்கள் பிரத்தியேக காலணிகள், உணவு கட்டுப்பாடு, சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்தல், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மருந்துகள் போன்றவற்றை பின்பற்றும் போது புண் ஏற்படாமல் தடுக்க முடியும். பெரும்பாலும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருந்தால் புண் ஏற்படாது. ஆனால் ஒரு சிலருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் புண் ஏற்பட்டு விடும்.

காலில் புண் ஏற்பட்டு விட்டால் நாம் தரும் மருந்துகள் ரத்த நாளம் மூலமாகவே புண்னை அடைய முடியும்.  ரத்த ஓட்டம்  தடைபட்டால் மருந்துகள் முழுமையாக புண்ணிற்கு போய் சேராமல் இருக்கும். நெடுநாள் சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகையிலை சார்ந்த பொருட்கள் பயன்படுத்துபவர்கள் போன்றவர்களுக்கு காலில் உள்ள ரத்த நாளங்களில் கொழுப்பு அல்லது சுண்ணாம்பு படிந்து அடைப்பு ஏற்படும்.

அந்த சமயத்தில் ஆஞ்சியோகிராம் செய்து ரத்த ஓட்டம் தடைபட்டுள்ள இடத்தையும், எத்தனை அடைப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறியலாம். அறுவை சிகிச்சை இல்லாமலேயே ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சை  மூலம் இதனை சரி செய்யலாம். இதனால் ரத்த ஓட்டம் சீராகி புண் விரைவில் ஆறி விடும். பெரும்பாலும் 70 முதல் 80% நோயாளிகளுக்கு புண் ஏற்பட்டாலும் கால்களை அகற்றாமல் காப்பாற்றி விட முடியும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் ஏற்பட்டு விட்டால் அதை உடனடியாக கவனத்தில் கொண்டு தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். முதல் கட்டத்தில் உணவுக் கட்டுப்பாடு, Regular dressings மற்றும் மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்தி விடலாம். சற்று முற்றிய நிலையில் கூட ஆஞ்சியோபிளாஸ்ட்டி மூலம் ரத்த ஓட்டத்தை சரி செய்து விட முடியும். இதன் மூலம் காலை அகற்ற வேண்டிய நிலையில் இருந்து காப்பாற்றி விடலாம்.

கால்களை எவ்வாறு பாதிக்கிறது?

டாக்டர் செந்தில்குமார், சர்க்கரை நோய் நிபுணர்

ஒருவருக்கு நீண்ட நாள் சர்க்கரை நோய் இருந்து, புகைபிடிக்கும் பழக்கத்தையும் அவர் தொடர்ந்தால், ரத்தக் குழாயில் கொழுப்புக் கட்டிகள் அடைத்து விடும். அவ்வாறு அடைபடும்போது கால்களுக்கு ரத்த ஓட்டம் பாய்வது தடைபடுகிறது. இது போன்ற சமயங்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டுவிட்டால் குணமாகாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்நோய் உள்ளவர்கள் புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நாட்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் கால் நரம்புகளைப் பாதித்து, காலில் உணர்வற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. அதனால் புண் ஏற்படும்போது அதை அவர்கள் உணர முடியாமல் போய்விடுகிறது. எனவே இந்த நோய் உள்ளவர்கள் காலில் ஏதேனும் புண் ஏற்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும்.

சில நேரங்களில் காலில் உணர்வுகள் சரியாக இல்லாமல் இருக்கும்போது காலின் வடிவமைப்பே மாறிவிடும். ஆரம்ப நிலையிலே இதுபோன்ற பாதிப்புகளைக் கண்டறிந்து விட்டால் அதற்கான காலணிகளை அணிந்து வடிவம் மாறுவதைத் தடுக்கலாம். இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்தாலே நரம்பு மற்றும் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

எதனால் புண் ஏற்படுகிறது?

டாக்டர் ராஜேஷ்குமார், பேராசிரியர், அறுவை சிகிச்சைத் துறை

சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் ஏற்பட்டு அதனால் காலை இழக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் உடனடி மருத்துவக் கவனிப்பினால் இதனைத் தடுக்க முடியும்.

நீண்ட நாட்களாக சர்க்கரை வியாதி கட்டுப்பாடில்லாமல் இருக்கும்போது கால் நரம்புகளையும், ரத்தக் குழாயையும் பாதித்து காலில் உணர்ச்சி திறனைக் குறைத்து விடுகிறது. இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு புண் ஆறுவதற்கான வாய்ப்பும் குறைகிறது.

இவ்வாறு உணர் திறன் குறைந்து, நோயாளி நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கும் போது, உடலின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய பகுதியில் புண் ஏற்பட்டு, ஆழமாக பரவி, எலும்பு வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தும் போது காலை இழப்பதற்கான வாய்ப்பு அதிகமாகின்றது.

சர்க்கரை நோயினால் புண் ஏற்பட்டு எங்களிடம் வரும் நோயாளிகளுக்கு ஆரம்ப நிலையில் ஆன்டிபயாடிக் கொடுக்கப்பட்டு புண் குணமாக்கப்படுகிறது. சிலருக்கு ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும்போது தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரத்த ஓட்டத்தை சீர் செய்வதற்கான சிகிச்சை முறைகள் உள்ளன. மிகவும் சிக்கலான தருணத்திலேயே கால்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஆரம்பத்திலே சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்தால் நரம்பு மற்றும் ரத்தக் குழாய் பாதிப்பைத் தடுக்க முடியும். மேலும் காலில் புண் ஏற்பட்டால் சுய மருத்துவத்தை மேற்கொள்ளாமல் விரைவில் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. ஒரு தனி மருத்துவக் குழுவுடன் இந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும்போது அதை இன்னும் சிறப்புற செய்ய முடிகிறது.