ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின், முதுநிலை கணினி அறிவியல் துறை சார்பில்,
‘கம்ப்யூட்டிங் ஆராயச்சிகளுக்கான பயிற்சியில் அதிநவீன தொழில்நுட்பம்-2021’ என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் மரிய பிரசில்லா வரவேற்றார். இணைப் பேராசிரியை ஹேமலதா கருத்தரங்கம் குறித்து பேசினார். பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் முருகவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கினார்.

தொடர்ந்து கருத்தரங்க மலரை வெளியிட்டு அவர் கூறியதாவது:
“பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 113 இணைப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில கல்லூரிகள் கல்வியிலும், சில கல்லூரிகள் விளையாட்டிலும், சில கல்லூரிகள் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகின்றன. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியைப் பொறுத்தவரை இம்மூன்றிலும் சிறந்து விளங்குகிறது. தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில் இக்கல்லூரி 84-வது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த முறை ஒற்றை இலக்கத்திலான இடத்தைப் பிடிக்கும் என்றும் நம்புகிறேன். இதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையில், தொழிற்துறை சார்ந்த மேம்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சிகளும், அதைச் சார்ந்த பயன்களும் தொழிற்துறைக்கு அவசியமாகிறது. மத்திய அரசு தொழிற்துறை சார்ந்து கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்தியாவில் உள்ள 9 நகரங்களைத் தேர்வு செய்துள்ளது. இதில் முதல்கட்டமாக ஹைதராபாத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதிக் கோரி, மத்திய அரசுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் கருத்துரு அனுப்பியுள்ளது. இதற்கு இணைப்புக் கல்லூரிகளும் தங்களுடைய பரிந்துரைகளை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பலாம்” எனக்கூறினார்.

அதைத்தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இதில் டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.