ஓடையான திருச்சி சாலை: தெற்கு தொகுதி எம்.எல்.ஏ ஆய்வு

கோவையில் வாலாங்குளம் நிரம்பி திருச்சி சாலையில் நீர் ஓடிவரும் சூழலில், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக உக்கடம் வாலாங்குளத்தில் நீர் நிரம்பியுள்ளது. இதனால், குளத்தில் உள்ள உபரி நீர் திருச்சி சாலை வழியாக கடந்த இரண்டு நாட்களாக வெளியேறி வருகிறது.

இதனால், திருச்சி சாலை ஓடை போல் மாறியுள்ளது. தொடர்ந்து உபரி நீர் வெளியேறி வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமமடைந்துள்ளனர். இதனிடையே மாநகராட்சி அதிகாரிகள் திருச்சி சாலையில் பொக்லைன் இயந்திரத்தை வைத்து கால்வாய் போன்ற அமைப்பை வெட்டி நீர் வழி பாதை அமைத்தனர். ஆனாலும், நீர் தொடர்ந்து ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதி குடியிருப்புகளுக்குள் சென்று வருகிறது.

இதனைடையே கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இதன் ஒருபகுதியாக வாலாங்குளம் சென்ற அவர் அங்கு அதிகாரிகளிடம் நீர் இருப்பு பற்றி கேட்டறிந்தார். மேலும், திருச்சி சாலை சென்ற அவர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களுக்கு தனது தொகுதி மக்களிடையே குறைகளை கேட்டறியும் வகையில் மனுக்களை பெற உள்ளார்.