தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள்

கோவையில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் கிக்கானி பள்ளி ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கோவையில் நேற்று தொடர் மழை பெய்தது. குறிப்பாக நள்ளிரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. குறிப்பாக உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் மழைநீர் தேங்கியதன் காரணமாக, சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல மேட்டுப்பாளையம் சாலையில் கிக்கானி மேல்நிலைப் பள்ளியின் அருகில் ரயில்வே பாலத்தின் கீழ்  பகுதியிலும் மழை நீர் தேங்கியது.

இதன் காரணமாக அந்தப் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தேங்கியுள்ள மழை தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.