சர்வதேச ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவருக்கு வெள்ளிப்பதக்கம்

சர்வதேச ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் கே. சதீஷ்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

பல்கேரியா நாட்டில் உள்ள புடாரஸ் நகரில், 46-வது சர்வதேச அளவிலான ஓபன் பேட்மிண்டன் போட்டி, கடந்த நவம்பர் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் இந்தியா, ஆஸ்திரியா, டென்மார்க், மெக்ஸிகோ, போலந்து, பல்கேரியா, ஹங்கேரி, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பேட்மிண்டன் வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஐ.பி. முதலாமாண்டு மாணவர் சதீஷ்குமார் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். பரபரப்பான இறுதி ஆட்டத்தில், பல்கேரியா நாட்டு வீரர் டேனியல் நிக்கோலவ் என்பவரை எதிர்க் கொண்டார். இப்போட்டியில் 21-17, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி வாய்ப்பைப் போராடி இழந்தார். இதன்மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சர்வதேச அளவிலான ஓபன் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் சதீஷ்குமாரை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் வடிவேல் ஆகியோர் பாராட்டினர்.