நமக்காக அல்ல, நம் தலைமுறைக்காக

இந்த ஆண்டு நவம்பர் முதல் வாரம், உலக வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நாள். ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் பருவநிலை மாநாடு நடைபெற்றது. இது  ஜி7 மாநாடு,  வளரும் நாடுகள் மாநாடு, சார்க் மாநாடு, பசிபிக் பிராந்திய மாநாடு போல நடக்கும் வழக்கமான மாநாடு அல்ல.

கிட்டத்தட்ட 120 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் சரிபாதி ஏழை நாடுகள். மற்ற பல்வேறு நாடுகளும் கலந்து கொண்டன.  ஒட்டு மொத்தமாக  அனைவரும் சேர்ந்துதான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் தற்போது உலகெங்கும் ஆங்காங்கே மெல்ல நிகழத் தொடங்கி விட்டன என்று தான் சொல்லவேண்டும்.

உயர்ந்து வரும் புவி வெப்பநிலை, கார்பன்  உமிழ்வு என்ற இந்த இரண்டும் தான் இந்த மாநாட்டின் முக்கிய புள்ளிகளாக இருக்கப்போகின்றன. இதில் சில குறிப்பிட்ட நாடுகள்தான் அதிகமான கார்பன் உமிழ்வுக்கு காரணமாக இருக்கின்றன. அதில் இந்தியாவும் ஒன்று. இந்த அணியில் உலகின் பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் கூட உள்ளன.

வரும் 2030க்குள் இந்த புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதும் அதற்கான பொருத்தமான படிப்படியான நடவடிக்கைகளை என்னவென்று ஆராய்ந்து கூடி முடிவெடுக்கவும் வேண்டும்.  இது தொடர்பான நிதி ஆதாரங்களை  ஒதுக்க வேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்க போகிறது.

1.5 டிகிரி வெப்பநிலை உயர்வு உலகில் இதுவரை காணாத சிக்கல்களைக் கொண்டு வந்துவிடும் என இயற்கை ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் அச்சப்பட்டு எச்சரிக்கும் நேரம் இது. அதே நேரம் தொழில் வளர்ச்சி பெற்ற முக்கிய நாடுகள் தங்கள் வளர்ச்சியை விட்டுத் தர மனமில்லாமல் அல்லது வழி இல்லாமல் இருக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். வசதி படைத்த வளர்ந்த நாடுகள் கூட வளர்ச்சிக்கான பங்களிப்பை தர மறுக்கிறார்கள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நிலக்கரி சுரங்கங்கள் ஆகும்.

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட பொருளாதார வளர்ச்சி குறைந்த ஒரு நாட்டில் இது முக்கிய தொழில் ஆதாரம் அல்லது வாழ்வாதாரம் என்று கூறலாம். நிலக்கரி சுரங்கங்களை உடனடியாக மூடி வெளியேறுவது என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு இயலாத காரியம். ஆனால் வெறும் வளர்ச்சி சார்ந்த பொருளாதார காரணங்களுக்காக வல்லரசுகள் ஆன அமெரிக்கா சீனா போன்ற நாடுகள்  சுரங்கங்களுக்கு ஆதரவளித்து உள்ளன. ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கூட இதில் இணைகின்றன.

இநத நிலையில் முக்கியமான  சிக்கல்களைக் குறித்து ஒரு நடைமுறை சார்ந்த முடிவை உலக நாடுகள் எடுக்க வேண்டும். அதை வளர்ந்த நாடுகள் கடைபிடிக்க வேண்டும். வளரும் நாடுகள் செயல்படுத்த உதவ வேண்டும். குறிப்பாக தேவையான நிதி ஒதுக்கீடு, தொழில் நுட்ப உதவி செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும்  மேலாக இந்த ஒரு முறையாவது நாம் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லை வேறுபாடு இல்லை என்பது போல நடக்க வேண்டும்.

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என்பதற்கு ஏற்ப கிளாஸ்கோ மாநாட்டின் முதல் படிக்கட்டாக, சொல்லுவதை செய்வதை நோக்கமாகக் கொள்ளலாம். இது நமக்காக அல்ல, நம்முடைய எதிர்கால தலைமுறைக்காக என்ற உண்மையான உணர்வுடன் இதனை அணுக வேண்டும்.