அன்று ஜானகி இன்று சசிகலாவா?

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் வலிமை வாய்ந்த ஒற்றைத் தலைமையாக, அவரது தோழி வி.கே.சசிகலா உருவெடுத்தார். எவ்வித சலசலப்பும் இன்றி அதிமுகவின் பொதுச்செயலர் பதவியைப் பிடித்த சசிகலா, முதல்வர் பதவி மீதும் கண் வைத்தார். ஆனால், சட்டப் பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதால் அவர் முதல்வர் பதவியை அடைய முடியாத சூழல் உருவானது.

அப்போது, முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்த ஓ.பன்னீர்செல்வம், தனக்கு அமைச்சரவைப் பட்டியலில் கூட இடம் கிடைக்காத சூழல் உருவானதால் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கினார். இந்த இக்கட்டான சூழலில் இருந்து அதிமுக ஆட்சியைக் காப்பற்றவும், தனது குடும்பப் பிடியில் கட்சி, ஆட்சி இருக்கும் வகையிலும் தனக்கு விசுவாசமான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்ததுடன், தனது அக்காள் மகன் டி.டி.வி.தினகரனையும் துணைப் பொதுச்செயலர் பதவியில் அமர்த்திவிட்டு ஜெயலலிதா சமாதியில் சத்தியம் அடித்து விட்டு சிறைக்குச் சென்றார் சசிகலா.

4 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியே வருவதற்கு முன்பு சசிகலாவுக்கு எதிராக அதிமுகவில் தலைகீழாக பல்வேறு அரசியல் மாற்றங்கள் அரங்கேறின. எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னம் இரண்டாவது முறையாக முடங்கியது. இந்நிலையில், கட்சி, ஆட்சியில் தனக்குத் தான் முதலிடம் கிடைக்க வேண்டும் என குறிவைத்த எடப்பாடி பழனிசாமி, எப்போதுமே சார்ந்து நின்றே பழக்கப்பட்ட, சாந்தமான ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொண்டு, சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இருந்து விலக்கி வைத்தார். இந்த அரசியல் நகர்வால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சியில் 90 சதவீத அதிகாரமும், கட்சியில் 50 சதவீத அதிகாரமும் கிடைத்தது.

அதிகாரமே இல்லாமல் கட்சிக்கு வெளியே இருந்த பன்னீர்செல்வத்துக்கு, ஆட்சியில் துணை முதல்வர் பதவியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும் கிடைத்தது. இரட்டை இலையில் கையெழுத்திடும் அதிகாரம் இருவருக்கும் கிடைத்ததால் அதிமுகவும் ஒற்றைத் தலைமையில் இருந்து இரட்டைத் தலைமைக்கு மாறியது.

தொடர்ந்து 4 ஆண்டு கால ஆட்சியில் இருவரும் கட்சியை வழிநடத்துவதாகக் கூறினாலும், ஆட்சியிலும், கட்சியிலும் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியது. ஒரு கட்டத்தில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை, ஓ.பன்னீர்செல்வமே முன்மொழியக்கூடிய நிலை உருவானது. இருப்பினும், பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டப் பின் பன்னீர்செல்வமும் தனது அதிகாரத்தை கையில் எடுக்கத் தொடங்கினார்.

வழிகாட்டுக்குழு அறிவிப்பு, வேட்பாளர் தேர்வு, கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றை நுட்பமாக பார்க்கும்போது பன்னீர்செல்வம் அதிகாரத்தைக் காட்டியது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இதன் மூலம் அதிமுகவில் சமபலம் பெற்ற தலைவர், முக்குலத்தோர் சமூகத்தில் சசிகலா, தினகரனை விட தான் தான் பெரிய தலைவர் என்பதை நிறுவினார்.

இதற்கிடையே சிறைவாசம் முடிந்து வெளியே வந்த சசிகலா தனித்துக் களம் இறங்குவாரா அல்லது அமமுகவுக்கு தலைமை தாங்குவாரா என்ற கேள்விகள் எழுந்தன. பேரவைத் தேர்தலில் அதிமுக, அமமுக கூட்டணியாகப் போட்டியிடக்கூடும் என்ற செய்திகள் தீவிரமாக பரப்பப்பட்டன. இருப்பினும், கடைசி நேரத்தில், அதிமுக வெற்றிபெற வேண்டும் என்பதால் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக சசிகலா அறிவித்தார். பேரவைத் தேர்தல் முடிவில் அதிமுக தோல்வி அடைந்தாலும், தனித்து 33 சதவீத வாக்குகளையும், கூட்டணியாக 39.5 சதவீத வாக்குகளையும் பெற்றது. எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் ராஜதந்திரத்தால் அமமுகவின் வாக்கு வங்கி 5.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக சரிந்தது. ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு சசிகலா முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தினகரனுக்கு ஆதரவாக தீவிரமாக களப்பணியாற்றி இருந்தால் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கு வங்கியும், சிறுபான்மையினர் வாக்கு வங்கியில் ஒரு பகுதியும் கிடைத்து, அமமுக மக்களவைத் தேர்தலில் பெற்ற 5.5 சதவீதத்தை விட கூடுதலாக வாக்கு வங்கியை பெற்றிருக்கும்.

இது தேர்தல் முடிவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அரசியலில் சசிகலாவின் பலமும் நிரூபிக்கப்பட்டிருக்கும். ஆனால், தனக்கு சாதகமான சூழலில் அரசியலை விட்டு சசிகலா ஒதுங்கியதால் சசிகலாவின் பலமும் நிரூபிக்கப்படாமல், தினகரனின் பலமும், அரசியல் முக்கியத்துவமும் குறைந்தது. அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பலம் அதிகரித்துவிட்டது.

ஆட்சியை இழந்த நிலையில் மீண்டும் அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என சசிகலா மீண்டும் அடம்பிடிக்கத் தொடங்கி பல்வேறு அரசியல் நகர்வுகளை கடந்த 6 மாதங்களாகவே செய்து வருகிறார். தன்னை அதிமுகவின் பொதுச்செயலர் என அறிவித்துக் கொண்டு அரசியல் நிகழ்ச்சிகள், அரசியல் சுற்றுப் பயணங்களை மீண்டும் தொடங்கியுள்ளார்.

தென்மாவட்டங்களில் அவர் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணம் காரணமாக அதிமுகவில் மீண்டும் சலசலப்பும், பல்வேறு யூகங்களும் எழுந்துள்ளது. மதுரையில் தென்மாவட்ட முக்கிய நிர்வாகிகளை வைத்துக்கொண்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தொடர்பாக அளித்த பேட்டிக்குபின் அதிமுகவில் மீண்டும் சலசலப்புகள் அதிகரித்துள்ளன.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சேர்த்து விமர்சனம் செய்துள்ளனர். மறுபுறம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அதிமுகவின் வழிகாட்டும் குழு உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் ஜெயக்குமாருக்கு ஆதரவாக பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, விருகை ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஆய்வு செய்தால் ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டிக்கு பின் பல்வேறு அரசியல் நுட்பங்கள் இருப்பதாகவே அரசியல் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். எடப்பாடி பழனிசாமி, அவரது தீவிர ஆதரவாளர்களாக கொங்கு மண்டலம், வடதமிழகம் ஆகியவற்றில் உள்ள நிர்வாகிகளுக்கு சசிகலாவின் சொந்த சமூகமும், அதிமுகவுக்கு எப்போதுமே தீவிரமாக வாக்களிக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகளால் எவ்வித பாதிப்பு ஏற்படபோவதில்லை. சசிகலாவால் இவர்களுக்கு துளியும் பயனில்லை.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல்களில் வெற்றிபெற வேண்டுமெனில் முக்குலத்தோர் சமூக ஆதரவும் தேவை. இதை மனதில் வைத்து தான் பன்னீர்செல்வம் மிகவும் நுட்பமாக அரசியல் நகர்வுகளைச் செய்து வருகிறார். இரட்டை இலையில் கையெழுத்திடும் அதிகாரம் இருவருக்கும் இருக்கும் நிலையில், தான் மட்டுமே நினைத்தால் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது சாத்தியமற்றது என்பது பன்னீர்செல்வத்துக்கு புரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.

ஆனால், சசிகலாவுக்கு எதிராக எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், ஆதரவாக இருப்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் முக்குலத்தோர் சமூகத்தினரை பகைக்காமல் தேர்தல் வரும்போது அந்த வாக்குகளை சசிகலா, தினகரன் ஆகியோரை மீறி 2021பேரவைத் தேர்தல் போல எப்படியும் பெற்றுவிடலாம் என்பது தான் பன்னீர்செல்வத்தின் நுட்பமான கணக்கு. அதிமுகவில் தனக்கு இருக்கும் 50 சதவீத அதிகாரத்தை வெளிப்படையாகக் காட்டவே பன்னீர்செல்வம் இதுபோன்ற அரசியல் நகர்வுகளை இப்போது வெளிப்படையாகச் செய்யத் தொடங்கியுள்ளார்.

ஜெயலலிதாவுடன் நிழல் அதிகார மையமாக இருந்தபோதும், தனித்து அதிகார மையமாக இருந்த போதும் சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு விசுவாசமாக இருந்து அதிகாரத்தைச் சுவைக்க வேண்டிய நிலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இருந்தது. ஆனால், இருவரின் ராஜதந்திரத்தால் அதிமுகவின் இரட்டை அதிகார மையங்களாக மாறிய பழனிசாமி, பன்னீர்செல்வம் அந்த அதிகாரத்தை 4 ஆண்டுகளாக முழுமையாக சுவைத்து வருகின்றனர். கட்சியில் பல்வேறு பொறுப்புகளைப் பெற இவர்கள் இருவரின் குடும்பங்களை அதிமுக நிர்வாகிகள் சுற்றிச் சுற்றி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் உச்சபட்ச அதிகாரத்தைப் பெற்ற இருவரும், அந்த அதிகாரத்தை எப்படி சசிகலாவிடம் கொடுப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி தான். ஒருங்கிணைந்த அதிமுகவில் மீண்டும் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெறுவது அத்தைக்கு மீசை முளைப்பதற்கு சமம். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையை ஏற்றுக்கொண்டு அதற்கு கீழ் உள்ள பொறுப்பை சசிகலா வகிக்க வேண்டும், இல்லையெனில் சசிகலா தலைமையில் இவர்கள் இருவரும் கீழ்ப் பொறுப்பை ஏற்க வேண்டும். இதில் இரண்டுமே சாத்தியமற்றது. ஆனால், சோனியா காந்தி மற்றும் சரத்பவார், கருணாநிதி மற்றும் வைகோ போல எதிர்காலத்தில் தேர்தல்களில் கூட்டணியாக இணைந்து செயல்பட முடியுமே தவிர ஒரே கட்சியில் இணைந்து பயணிப்பது கானல் நீராகவே இருக்கும்.

மேலும், சசிகலாவுக்கு இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பு அதிமுகவை மீட்பதை கைவிட்டு, தனது வாக்கு பலத்தை நிரூபிப்பது தான். அதற்கு எதிர்வரும் பேரவைத் தேர்தலில் தனித்தோ அல்லது தினகரன் தலைமையிலான அமமுகவை கையில் எடுத்துக் கொண்டோ, மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி தீவிரமாக தேர்தல் களப் பணியாற்றினால் தனது பலத்தை நிரூபிக்கலாம். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி, 4 ஆண்டுகள் பெற்ற சிறைவாசம், சக்திவாய்ந்த பெண் தலைவர், அரசியலில் தனக்கும், தனது குடும்பத்துக்கும் எதிராக நடத்தப்படும் பழிவாங்கும் நடவடிக்கை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிரான பிரசாரம், திமுகவுக்கு எதிராக கடும் விமர்சனம் உள்ளிட்ட ஆயுதங்களை சசிகலா கையில் ஏந்தி அரசியல் செய்தால் கணிசமான அளவு தனது வாக்கு வங்கியை நிரூபிக்க முடியும். அரசியல் அரங்கில் வாக்கு வங்கியை நிரூபித்தால் மட்டுமே மதிப்பு கிடைக்கும். 2021 பேரவைத் தேர்தலில் இதுபோன்ற உத்தியை கையில் எடுக்காததன் முடிவால் சசிகலாவும் பலம் காட்ட முடியாததுடன், தினகரனின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியானது. எதிர் காலத்திலாவது பாடம் கற்றுக்கொள்வாரா சசிகலா?

அதிமுகவின் எதிர்காலம் என்பது 2016 க்குப் பின் ஒற்றைத் தலைமையில் இருந்து இரட்டைத் தலைமைக்கு மாறிவிட்டது. இனிமேல் இரட்டைத் தலைமையில் இருந்து யாராவது ஒற்றைத் தலைமைக்கு முயற்சி எடுத்தால் அது இரட்டை இலைக்கு வேட்டு வைப்பதாகவே இருக்கும். எந்த சூழ்நிலையிலும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களில் ஒருவருக்கோ அல்லது தங்களைத் தவிர்த்து வேறு ஒருவருக்கோ இரட்டை இலையில் கையெழுத்திடும் உரிமையை எப்போதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பது தான் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.