ஓங்கி ஒலிக்கும் நீதியின் குரல்

தனி மனித உரிமைக்கு எதிரான தாக்குதலில் இருந்து ஒவ்வொரு குடிமகனையும் காப்பது என்பது மக்களாட்சியின் உயர்ந்த மாண்பு ஆகும் . இந்த தாக்குதலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தனிநபரோ , நிறுவனமோ, ஏன் அரசாங்கமே இருந்தால் கூட அது குறித்த உண்மை நிலையை அறிந்து நீதி வழங்குவது அவசியம் என்பதை இந்திய உச்சநீதி மன்றம் தனது ஆணையில் தற்போது தெரிவித்துள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர் என். ராம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் இவ்வாறு ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் சேர்த்து வழிகாட்டும் வகையில் ஒரு வல்லுநர் குழுவையும் அமைத்துள்ளது.

பெகாசஸ் என்றால் என்ன? இஸ்ரேல் நாட்டின் என்எஸ்என் என்ற நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசாங்கங்கள் முக்கியப் பிரமுகர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக சர்வதேச ஊடகங்களில் சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இந்தியாவில் மட்டும் எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என்று இந்தியாவில் மட்டும் சுமார் 300 பேரின் செல்லிடப் பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடெங்கும் அதிர்வலைகளை உருவாக்கியது.

இது தொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் இதுகுறித்து மத்திய அரசை விசாரித்ததில் தெளிவான எந்த பதிலும் மத்திய அரசிடம் இருந்து பெறப்படவில்லை. மத்திய அரசு தாக்கல் செய்த தனது பிரமாணப் பத்திரத்தில் இந்த விவகாரம் தேசப் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரம் என்பதால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இயலவில்லை என்று கூறியது. வேண்டுமானால் ஒரு நிபுணர் குழுவை அமைக்கலாம் என்றும் கூறியது.

ஆனால் அந்த பதிலில் போதிய தகவல்கள் இல்லாததை உணர்ந்த உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து துறை சார்ந்த தகு‌ந்த வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து அதன் தலைவராக ஒரு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியையும் நியமித்து உள்ளது.

இதில் பல துறை சார்ந்த வல்லுநர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். இதன் மூலம் இந்த மென் பொருள் இந்தியர்களின் செல்போன்கள் மற்றும் இதர கருவிகளில் உள்ள தகவல்களை பார்க்கவோ கேட்கவோ பயன்படுத்தப்பட்டதா, அதைப் பயன்படுத்தியது யார், அப்படி இருந்தால் என்ன சட்ட விதிகளின் கீழ் அவர்கள் அதைப் பயன் படுத்தினார்கள் என்று விசாரிக்க ஆணை இட்டுள்ளது. இது குறித்த ஒரு விசாரணையை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் இந்த குழுவை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் விதமாகவும், அரசாங்க விஷயங்களில் தலையிடாமல், ஆனால் அதே நேரத்தில் தனிமனித உரிமையை காப்பாற்றுவதற்காகவும் உச்சநீதிமன்றம் செயல்பட்டதாக வல்லுநர்களும், அரசியல் நோக்கர்களும், கருதுகிறார்கள்.

மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை நிலை நிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் ஆகிவிடக் கூடாது. மத்திய அரசாங்கமே ஆனாலும் இதை மதித்து நடந்து தனிமனித உரிமை என்ற விஷயத்தில் சட்டப்படி செய்ய வேண்டியது அதன் கடமை, அதற்கான வழி முறைகளை செய்ய வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றான உச்சநீதி மன்றம் அதன் இன்னொரு அங்கமான மத்திய அரசாங்கத்துடன் எந்த விதமான மோதல் போக்கையும் கடைப்பிடிக்காமல் அதே நேரத்தில் தனிமனித உரிமையை காப்பாற்றுவது என்ற நடைமுறையும் செயல்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.