தானத்தில் சிறந்தது…

50 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

பி.எஸ்.ஜி மருத்துவக் குழுவின் சாதனை!

நம் உடலில் நகம் மற்றும் முடி போன்றவற்றை வெட்டினால் எப்படி மீண்டும் வளர்ந்து விடுமோ அதுபோல கல்லீரலை வெட்டினாலும் வளர்ந்து விடும் என்று சொன்னால், சற்று ஆச்சரியமாக உள்ளதல்லவா? ஆம், அதுவும் ஒரு மனிதரால் 30% கல்லீரலை வைத்து உயிர் வாழ முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அழுக்குகளை நீக்குவது, பித்த நீரை உற்பத்தி செய்வது, ஊட்ட ச் சத்துக்களை சேகரித்து வைப்பது என மூன்று முக்கிய செயல் திறன்களை கல்லீரல் செய்கிறது. ஆனால் நம் கல்லீரல் பாதிப்பு மிகவும் முற்றிய நிலையில் இருந்தால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் கோவையின் முன்னணி மருத்துவமனையான பி.எஸ்.ஜி மருத்துவமனை ஒரு சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது. அதுகுறித்து அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்:

எங்கள் மருத்துவக் குழுவின் சாதனை இது!

டாக்டர் புவனேஸ்வரன், மருத்துவ இயக்குனர், பி.எஸ்.ஜி மருத்துவமனை

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்படைந்த 50 நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை ஒரு மைல்கல்லாக கருதுகிறோம். இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் எங்கள் மருத்துவர்களும், அவர்கள் மீது நம்பிக்கை கொண்ட நோயாளிகளும் தான். மேலும் மூளைச் சாவு அடைந்த நபர்களின் உறுப்புகளை உடல் உறுப்பு தானம் செய்ய உறவினர்கள் முன்வர வேண்டும். அப்போதுதான் இம்மாதிரியான மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் சிக்கல் ஏற்படாது.

விழிப்புணர்வு அவசியம்!

டாக்டர் வெங்கட கிருஷ்ணன், தலைமை மருத்துவர், குடல் கல்லீரல் கணைய சிகிச்சை மற்றும் ஹெபடாலஜி

நோயாளிக்கு நீண்ட நாட்களாக கல்லீரல் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு சோர்வு இருக்கும். உண்ண முடியாமை, தோல் அரிப்பு, வாந்தி, மயக்கம், களைப்பு, எடை குறைவு ஏற்படும். சில நேரங்களில் 70% கல்லீரல் பாதிப்படைந்த பின்தான் அனைத்து அறிகுறிகளும் தென்படும்.

நாங்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் தீவிரமான நிலையை அடைந்தவர்களை அதிகம் காண்கிறோம். கல்லீரல் சுருங்கிப்போவதை சிர்ரோசிஸ் என்றும் அழைக்கிறோம். சிர்ரோசிஸ் தான் கல்லீரல் பாதிப்பில் இறுதி நிலை. இந்த நிலையை எட்டுவதற்கு குறைந்தது 10 அல்லது 15 வருடங்கள் ஆகலாம். இவர்களுக்கு எந்த மருத்துவ சிகிச்சை அளித்தாலும் கல்லீரலில் முன்னேற்றம் ஏற்படாது.

கல்லீரல் ஒவ்வொரு நிலையிலும் பாதிப்படையும் போது ரத்த வாந்தி, மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர் சேர்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படும்.

கல்லீரல் பாதிப்பு முற்றிய நிலையில் காணப்பட்டால் எங்கள் மருத்துவக் குழுவுடன் மாற்று அறுவை சிகிச்சை குறித்து கலந்தாலோசிப்போம். பின் நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யக்கூடிய அளவிற்கு உடல்நலன் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பரிசோதிப்போம். அதன் பின் தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் நோயாளியை நல்ல முறையில் கவனித்து தயார்ப் படுத்த வேண்டும். மேலும், மக்களிடம் உறுப்புதானம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

உறுப்பு தானம் செய்ய முன் வாருங்கள்!

டாக்டர் மகேஸ்வரன், ஆலோசகர் (HPB) மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்

மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு மருத்துவக் குழு பங்குபெற்று செய்யக் கூடிய வேலை ஆகும். பி.எஸ்.ஜி மருத்துவமனையில் 50 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர கல்லீரல் உடன் சேர்த்து சீறுநீரகம் மாற்று அறுவை சிகிக்சையும் செய்யப்பட்டுள்ளது. தலையில் அடிபட்டு மூளைச் சாவு அடைந்தவர்கள் அல்லது உறவினர்கள் அளிக்கும் கல்லீரலைக் கொண்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.

பல நோயாளிகளுக்கு கல்லீரல் கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் நம் நாட்டில் உள்ளது.போதிய அளவு கல்லீரல் கிடைக்காததால் இறப்பவர்களின் என்ணிக்கையும் அதிகமாக உள்ளது. சாலை விபத்துகளில் மூளைச் சாவடைந்து மரணமடைபவர்களின் உறுப்புகளை, அவர்களின் உறவினர்கள் தானமாக அளிக்க முன்வந்தால் அந்த ஒருவரின் உடல் உறுப்பு மூலம் 8 நபர்கள் பயனடையலாம்.

சீறுநீரகம் தானமாக அளிக்க உறவினர்கள் பலர் முன்வருகின்றனர். ஆனால் கல்லீரலை தானமாக அளிக்க பலர் முன்வருவதில்லை. சாதாரணமாக ஒரு மனிதன் உயிர்வாழ 30% கல்லீரல் இருந்தாலே போதுமானது. நமக்கு இருக்கும் 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் கல்லீரலைப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தானமாக அளிக்கலாம்.

நம் உடலில் உள்ள முடி மற்றும் நகம் ஆகியவற்றை வெட்டினால் எப்படி தானாக வளர்கிறதோ அதுபோல கல்லீரலும் தானாக வளரக்கூடிய ஒரு உறுப்பு. உங்களது 50 % கல்லீரலை நீங்கள் தானமாக அளித்தாலும் 6 வாரத்தில் அந்த பகுதி வளர்ந்து விடும். இதனால் உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. தானம் அளிக்க முன்வருபவர்களுக்கும் பல பரிசோதனைகளைச் செய்த பின்னரே கொடையாளிக்கு பொருத்த முடியும்.

கல்லீரல் தானமாக கிடைக்காமல் இருக்கும் அனைவரும் இறக்க நேரிடாது. மிகவும் மோசமான நிலையில் கல்லீரல் பாதிப்படைந்தவர்களில் தொற்று அல்லது ரத்தக் கசிவு ஏற்பட்டு சரியான நேரத்தில் உறுப்பு கிடைக்காமல் இருந்தால் மட்டுமே இறக்க நேரிடும்.

மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளமால் துரித உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் கொழுப்பு படிகிறது. இதுவும் கல்லீரல் பாதிப்புக்குக் காரணம். உடற்பயிற்சி, சரியான உணவு எடுத்து கொண்டாலே கல்லீரல் பாதிப்படைவதை தடுக்கலாம். பாதிப்பைக் கண்டறிந்த பின் சரியான சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்து வந்தாலே மாற்று அறுவை சிகிச்சைக்கு செல்லக் கூடிய நிலைய தடுக்க முடியும்.

பல துறைகளின் ஒருங்கிணைப்பு!

டாக்டர் பிரசாந்த் குமார், தலைமை மயக்க மருந்து நிபுணர்

மருத்துவக் குழுவினரின் ஒருங்கிணைப்பினாலே இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சாத்தியப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் போது நோயாளிக்கு அளிக்கக் கூடிய மயக்க மருந்து என்பது மிகவும் சவாலாக இருக்கக் கூடிய ஒன்று. ஒவ்வொரு நிமிடமும் நோயாளியை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இது போன்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு கிட்டத்தட்ட 12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் வரை ஆகலாம். அந்த சமயத்தில் நோயாளியை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாற்று அறுவை சிகிச்சை செய்து முடித்த பின்னரும் நோயாளியை அடுத்த 24 மணி நேரத்திற்கு கண்காணிப்பிலே வைக்க வேண்டும்.