மழை வருது, மழை வருது குடம் கொண்டு வா!

வடகிழக்குப் பருவமழை வருவதற்குக் காத்திருக்கிறது. இன்னும் என்ன புயல் உருவாகுமோ என்று ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து, நீர்நிலைகள் நிரம்பினால் கோடை காலத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை இருக்காது என்று அதிகாரிகளும், ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களும் இன்னொரு புறம். சரியான மழை இருந்தால் இந்த ஆண்டு விளைச்சலும் நன்றாக இருக்கும் என எண்ணம் ஒரு பக்கம். இவை எல்லாமே வருகின்ற மழைப் பொழிவை வைத்துத் தான்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி நாம் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது. அது தான் மழைநீர் சேகரிப்பு. அதில் இப்போதே அக்கறை காட்டிச் செயல்பட வேண்டும். சேமிக்கின்ற ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி என்று உணர வேண்டும். ஆனால் அதை ஒவ்வொரு முறையும் தவற விட்டுக்கொண்டே தான் இருக்கிறோமோ என்று தான் தோன்றுகிறது.

மும்பையில் மழை, அஸ்ஸாமில் வெள்ளம், அந்த நகரம் மிதக்கிறது, இந்த ஊரை கடக்க முடியவில்லை என்பதெல்லாம் அவ்வப்போது வரும் செய்தி. ஆனால் காலி குடங்களும், தண்ணீருக்கு அலையும் கவலை தரும் முகங்களும் தான் தமிழ்நாட்டின் அன்றாடச் செய்தி என்பது தான் உண்மை.

பொதுவாகவே கொஞ்சம் ஏமாந்தால் குடிநீருக்குக் கூட தட்டுப்பாடு ஏற்படும் மாநிலம் தான் தமிழ்நாடு. இந்த நிலையில் நிலத்தடி நீர் படுவேகமாக கீழே போய்க் கொண்டு இருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்தி எதிர்காலத்தில் இந்த சிக்கலை சமாளிக்க ஒரே வழி மழைநீர் சேகரிப்பு தான். ஆங்காங்கே அத்தி பூத்தாற்போல சில தனியார் நிறுவனங்களும் இதில் சாதித்திருந்தாலும் இன்னும் நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம்.

தமிழ்நாடு போன்ற நகரமயமாதல் அதிகமான தொழில்வளர்ச்சி பெற்ற மாநிலத்துக்குப் பல வகையிலும் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. அதை நவீன தொழில்நுட்பம் மூலம் பெறுவதற்கு ஆகும் செலவை விட மழை நீர் சேகரிப்பு மிகவும் மலிவும், பயனளிக்கக் கூடியது ஆகும். அதில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அப்போது பெய்யும் மழைநீர் என்பது முன்பு போல இல்லாமல் ஒரு நிச்சயமற்ற தன்மையைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அப்படி இருக்கும் போது கிடைக்கின்ற மழைநீரை நல்ல முறையில் சேமித்து வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

குறிப்பாக நகரங்களில் பெய்யும் மழைநீரில் பெருமளவு வீணாகத் தான் சென்று சாக்கடைகளில் கலக்கிறது. கான்கிரீட் சாலைகள், தொடங்கி தொழிற்சாலைக் கூரைகள், வீட்டு மொட்டை மாடி என்று ஏராளமான நல்ல பரப்பளவில் மழை நீரை சேமிக்க முடியும். அந்த மழைநீரை சேமிக்க உதவும் வகையில் அந்தந்த பகுதிக்கு ஏற்ப தகுந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் கோடிக் கணக்கான லிட்டர் மழைநீரை சேமிக்க முடியும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாதாளத்தில் இருக்கும் போது இந்த மழைநீர் சேமிப்பு பல வகையிலும் கைகொடுக்கும். எல்லாவற்றையும் விட எப்படி புயல் என்பது ஒரு நிச்சயமற்ற தன்மையோடு அடிக்கடி வரத்தொடங்கி இருக்கிறதோ அது போலவே வறட்சியும் ஏற்படக்கூடும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். அந்த சூழல் ஏற்படும் போது கைகொடுப்பது இந்த நிலத்தடி நீர் தான்.

அதை ஏற்கனவே கண்டபடி ஏராளமாக உறிஞ்சி எடுத்து காலி செய்து வைத்திருக்கிறோம். சுவரை வைத்துதான் சித்திரம் என்பது போல, நீரை வைத்துதான் நமது மனித நாகரீகம், வாழ்வு எல்லாம்!