ஆல் இந்தியா யூத் ஸ்போர்ட்ஸ்: கராத்தேவில் கோவை மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

கோவாவில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான ஆல் இந்தியா யூத் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் கராத்தே பிரிவில் கோவையைச் சேர்ந்த 16 மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

யூத் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் இந்தியா’ சார்பில், ஆல் இந்தியா யூத் ஸ்போர்ட்ஸ் டோர்னமென்ட் – 2021′ என்ற தலைப்பில், கோவாவில் கடந்த எட்டாம் தேதி மூன்று நாட்கள் நடைபெற்றது. 14,19 வயது, சீனியர் என, மூன்று பிரிவினருக்கான கபடி, கால்பந்து, கராத்தே, சிலம்பம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களிலிருந்து, 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கராத்தே போட்டியில் கோயம்புத்தூர் அட்வென்ச்சர் அகாடமி ஆப் மார்ஷல் ஆர்ட்ஸ் சார்பில் தமிழகம் சார்பாக கோவையைச் சேர்ந்த 16 மாணவர்கள் கலந்து கொண்டு 23 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

கட்டா மற்றும் குமித்தே என இரு பிரிவுகளிலும் சாதித்த கோவை திரும்பிய மாணவர்களை, கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவர்களின் தலைமை பயிற்சியாளரும், ஏசியன் கராத்தே பெடரேஷன் நடுவர் அறிவழகன் கூறுகையில், கோவையைச் சேர்ந்த 16 மாணவர்கள் கட்டா, குமித்தே ஆகிய போட்டியில் கலந்து கொண்டு ஒன்பது தங்கப் பதக்கம், ஆறு வெள்ளிப்பதக்கம் மற்றும் எட்டு வெண்கலப் பதக்கம் என மொத்தம் இருபத்தி மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளதாக கூறினார். அதுமட்டுமல்லாமல் எங்கள் மாணவர்கள் பல்வேறு தேசிய மற்றும் அகில அளவிலான கராத்தே போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளதாகவும், இன்னும் பல வெற்றிகளை பெற்று கோவைக்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, கோயமுத்தூர் அட்வென்சர் அகாடமி ஆஃப் மார்சல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர்கள் ராஜேஷ், நாசர்தீன், வினோத், சீதாலக்ஷ்மி, மனோஜ் பிரபாகர், பிரித்வி ஆகியோர் உடனிருந்தனர்.