ஒரு சாமானியனின் சாதனை சாமானியருக்காக!

இந்தியாவில் முதல்முறையாக ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தொடங்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

முப்பது ஆண்டுகள் என்பது ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் பெரிதாக இருந்தாலும், ஒரு மாபெரும் லட்சியத்திற்கு அது நொடிபொழுது போன்றது தான் என்பதை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார் கே.எம்.சி.ஹெச். மற்றும் என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் நல்ல. ஜி. பழனிசாமி.

1990-ல் இவரால் தொடங்கப்பட்ட கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிடல், அதன் பின் எழுந்த டாக்டர். என்.ஜி.பி. கல்வி நிறுவனங்கள், கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி அனைத்தும் ஏற்படுத்திவரும் சமூக முன்னேற்றத்தைப் பற்றி கோவை மக்கள் நன்கு அறிவர்.

“கல்வி, மருத்துவம் ஆகிய இருதுறையில் எல்லாவற்றையும் சாதித்துவிட்டதாக உணர்கிறீர்களா?” என்று 2021 மருத்துவர்கள் தினத்தின் போது எழுப்பிய கேள்விக்கு “செய்ய இன்னும் எவ்வளவோ உள்ளது” , என்றார் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி.

இதற்குமேல் கல்வி, மருத்துவத் துறையில் இவர் செய்ய வேண்டியது என்னவாக இருக்கும் என்ற கேள்வி அன்று இருந்தது, இப்போது அதற்கான விடை கிடைத்திருக்கிறது.

அவிநாசி சாலை கே.எம்.சி.ஹெச் மெயின் சென்டர் வளாகத்தில் 14,00,000 சதுர அடி நிலப்பரப்பில், 750 படுக்கைகளுடன் தரமான மருத்துவ சிகிச்சைகளை வழங்கக்கூடிய உட்கட்டமைப்பு, நிபுணத்துவத்துடன் உதயமாகிறது கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

தொடுவானத்தின் எல்லை போல் காலங்கள் செல்ல செல்ல தன் லட்சியத்தின் எல்லையையும் விரிவுபடுத்திக் கொண்டுவருகிறார் டாக்டர் நல்ல.ஜி. பழனிசாமி. இந்த புத்தம் புது மருத்துவமனையைப் பற்றி அவரிடம் எழுப்பிய சில கேள்விகளுக்கான பதில்கள் :-

ஒரு பயணத்தின் தாக்கமே இது:

இந்தியாவில் மருத்துவக்கல்லூரிகள் பொதுவாகவே அரசாங்கத்தாலோ, அறக்கட்டளையாலோ அல்லது தனியாராலோ தொடங்கப்படும். கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிடல் லிமிடெட் போன்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மருத்துவக்கல்லூரியை ஆரம்பிப்பது என்பது இந்தியாவிலேயே இது தான் முதல் முறை. 1973-1975 வரை கோவை அரசு மருத்துவமனையில் விரிவுரையாளராகவும், உதவி பேராசிரியராகவும் இருந்த போதே நம் ஊர் மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கவேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. உயர் படிப்பிற்கு 1975ல் அமெரிக்கா சென்றேன்.

இந்திய நாட்டை விட அங்கு எப்படி மருத்துவம் செய்கிறார்கள் என்பதை அறியவும், பயிற்சி பெற்றபின் நம் ஊர் மக்களுக்கும் மேல்நாடுகளில் கிடைக்கும் சிகிச்சைகளை கொண்டுசேர்க்கவேண்டும் என்ற ஆவலுடன் தான் அங்கு சென்றேன்.

அங்கு மருத்துவ சேவை வழங்குவதில் அவர்களின் தரம் ஓங்கி இருந்தது. அவர்களைப் போலவே மிக நேர்த்தியாக சேவைகளை கோவையில் வழங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, இங்கிலாந்து நாடுகளில் இருந்த என் நண்பர்களிடம் என் ஆவலைச் சொன்னேன்.

1987ல் கோவையில் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடக்கம், ‘88ல் கட்டிடம் எழுப்பினோம், ‘90ல் நிறைவேற்றினோம். அந்தாண்டு ஜூன் 24 முதல் இப்போது வரை அங்கு கண்ட அதே தரத்துடன், அதிநவீனத்துடன், நியாயமான அணுகுமுறையுடன் 31 ஆண்டுகளை தாண்டிச் செல்கிறது கே.எம்.சி.ஹெச். இதேபோல் உயர்ந்த தரத்துடன் மருத்துவக்கல்லூரியும் அத்துடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் கட்டவேண்டும் என்ற ஆவல் இருந்தது. 2019ல் மருத்துவக்கல்லூரி கனவு நிஜமானது, ஆனால் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கனவை நிறைவேற்றுவதில் சிறு சிறு சவால்கள் இருந்தன.

14 லட்சம் சதுர அடியில் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஒரு ஆண்டுக்குள் கட்டிமுடிக்கவேண்டும் என்று இருந்தோம். அதற்கான நவீன கட்டுமான முறையை உபயோகிக்க முடிவுசெய்து 2019 நவம்பர் மாதம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது தான் கோவிட் பெரும்தொற்று காலம் ஆரம்பமானது. இதனால் காலம் விரயமானது. இருந்தபோதிலும் பின்நாட்களில் முழு மூச்சுடன் மிக நேர்த்தியாக இந்த மருத்துவமனையை கட்டியெழுப்பியுள்ளோம்.

எளியோருக்குத் துணையாக:

இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள 750 படுக்கைகள் அனைத்துமே பொது வார்டு படுக்கைகள் தான்.

கே.எம்.சி.ஹெச் மெயின் சென்டரில் உள்ள பொதுப் பிரிவில் உள்ள மருத்துவ ஆய்வகம், எம்.ஆர்.ஐ, சி.டீ.ஸ்கேன் கருவிகள் மற்றும் கேத்லாப் சிகிச்சைப் பிரிவுகள் இங்கு உள்ளன.

இரண்டு மருத்துவமனைகளும் வேறு வேறாக இருந்தாலும் இங்கு கிடைக்கும் சேவைகளின் தரம் ஒன்று தான். அந்த மருத்துவமனையின் பொதுப் பிரிவில் சேரும் கட்டணத்தை விட இங்கு குறைவாகவே இருக்குமாறு முயற்சி எடுத்துள்ளோம். இந்த மருத்துவமனையில் யாருக்கெல்லாம் சலுகை விலையில் சிகிச்சை வழங்க முடியுமோ, யாருக்கெல்லாம் இலவசமாக கூட சிகிச்சை வழங்கமுடியுமோ அவர்களுக்கு நிச்சயம் வழங்க முயலுவோம்.

ஒவ்வொரு ஆண்டும் ரூ.10–15 கோடி வரை மதிப்பிலான மருத்துவச் சேவைகளை இலவசமாக கே.எம்.சி.ஹெச் மெயின் சென்டரில் வழங்கி வருகிறோம்.

மாணவர்கள் மீது உள்ள எதிர்பார்ப்பு:

கல்வியுடன் ஒழுக்கம், மரியாதை, கண்ணியம் ஆகியவை வளர்த்துகொண்டு மாணவர்கள் இந்த மருத்துவக் கல்லூரியில் படித்து வெளியே செல்ல வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

மருத்துவ மாணவர்கள் தன் இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டுவரை பயிலும் போது நோயாளிகளை சந்தித்து அவர்கள் பிரச்சினைகள் என்ன என்று அறிந்து, அவர்களுக்கு தீர்வு தர கற்கவேண்டும். இந்த மருத்துவக்கல்லூரியில் நல்ல படியாக பயிற்சிகள் வழங்கப்படும். அதைக் கற்று, தேர்ந்து, தைரியம் மிகுந்த மாணவனாக ஒவ்வொருவரும் வெளிவரவேண்டும்.

வெளிவந்தபின், மீண்டும் திறனைப் பெருக்கிக்கொள்ளும் வண்ணம் ஒரு சிறப்பு மருத்துவத் துறையை தேர்ந்தெடுத்து அதில் பயிற்சி பெற்று பின்னர் தன் மருத்துவப்பணியை தொடங்க வேண்டும்.

பெரும் முயற்சிக்கு வாழ்த்துகள்!

எல். கோபாலகிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர், பி.எஸ்.ஜி அறக்கட்டளை

ஒரு நல்ல நோக்கத்துடன் கோவையில் உலகத் தரம் கொண்ட மருத்துவ மனையையும், கல்வி நிறுவனங்களையும் நடத்தி வரும் டாக்டர். நல்ல. ஜி. பழனிசாமி, இந்த சவால்கள் நிறைந்த காலத்திலும் எடுத்திருக்கக்கூடிய பெரும்முயற்சியான இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல்லாயிரக்கணக்கான எளிய மக்களின் பிணி போக்கி, வாழ்வில் இனிமை சேர்க்க ’பி.எஸ்.ஜி அறக்கட்டளை சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவையின் மணிமகுடம்!

கே.பி.ராமசாமி, தலைவர், கே.பி.ஆர் குழுமம்

நல்ல ஜி.பழனிசாமி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். ரோட்டரி கிளப் சார்பாக நாங்கள் சுற்றுலா செல்லும்போது அதிகம் கலந்துரையாடி உள்ளோம். நிறைய விசயங்கள் குறித்து விவாதிப்போம்.

வெளிநாட்டில் மருத்துவப் பணி புரிந்ததால் அங்கேயே தங்கி விடாமல் தன் சொந்த மண்ணின் மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென கோவைக்கு கனவோடு வந்து ஒரு பெரிய ஸ்தாபனத்தையே உருவாக்கியுள்ளார்.

மேலும், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரது இரண்டாவது மகன் அருண் மருத்துவமனை நிர்வாகத்தைச் சிறந்த முறையில் கவனித்துக் கொண்டார். தொய்வில்லாமல் சவாலான பணியைத் தன் தந்தையைப் போலவே திறம்பட செய்தார். அவரது குடும்பமே மருத்துவச் சேவை ஆற்றி வருகின்றனர்.

இன்றுவரை ஓய்வில்லாமல் வேலை செய்து, இதுபோன்ற சேவைகளை வழங்கி வரும் இவர், இப்போது மருத்துவக் கல்லூரியைத் தொடங்கியுள்ளார். இதற்கு அவரது உழைப்பே காரணம்.

தொடரும் பணிகள்!

ஏ.சக்திவேல், தலைவர், கொங்கு குளோபல் ஃபோரம்

மருத்துவர் நல்ல.ஜி.பழனிசாமி அவர்களால் நிறுவப்பட்ட கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மருத்துவச் சேவை ஆற்றி வருவதோடு அனைத்து மருத்துவ வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் ஆசியாவிலேயே சிறந்த மருத்துவ மனைகளில் ஒன்றாக கே.எம்.சி.ஹெச் உள்ளது.

மருத்துவத்தோடு அல்லாமல், கல்வியிலும் தனது சேவையைத் தொடர்ந்து வந்த அவர் இப்போது மருத்துவக் கல்விச் சேவையைத் தொடர உள்ளார். மேலும் மருத்துவத்திலும், கல்வியிலும் அவர் பெற்ற பரந்த அனுபவங்கள், புதிதாக உருவாகியுள்ள இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் ஆசியாவிலே சிறந்த கல்லூரியாக பெயர் பெறச் செய்யும். இந்த நேரத்தில் அவரை நான் வாழ்த்துவதோடு, அவரின் வெற்றிக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

செயல்வடிவம் பெற்ற கனவு!

கே.ஆர். நாகராஜன், நிறுவனர், ராம்ராஜ் காட்டன்

பெருந்துறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, மருத்துவம் கற்று, இன்று அவர் ஆற்றி வரும் சேவைகள் அளப்பரியது. அவரின் முயற்சியால் உருவான கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை பல உயிர்களைக் காப்பாற்றி வருகிறது. இது போன்ற பெரிய மருத்துவமனை கோவையில் இல்லையென்றால் சென்னையை நோக்கியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும். சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்து மருத்துவத் தொழில்நுட்ப வசதிகளையும் கொண்ட இடமாகத் திகழ்கிறது.

கோவை மட்டுமல்லாமல் பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் சிகிச்சைக்கு இங்கு வருகின்றனர்.

எனக்கு அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பல தருணங்களில் கிடைத்துள்ளது. அப்போது அவரின் மருத்துவக் கல்லூரி கனவு குறித்து என்னிடம் கூறியுள்ளார். சிந்தையில் உதித்த அவரது கனவு செயல்வடிவம் பெற்று சீரிய முயற்சியால் நிறைவேறியுள்ளது. ஏழை, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவை ஒளிபெற செய்வதோடு, தனது கல்வி மற்றும் மருத்துவச் சேவை அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அவரின் கனவு.

பெருமை கொள்ளும் தருணம்!

டாக்டர் எஸ்.ராஜசபாபதி, இயக்குனர், கங்கா மருத்துவமனை

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைத் தலைவர் நல்ல.ஜி. பழனிசாமி அவர்களின் முயற்சியால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையால் கோவையைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் மற்றுமொரு தருணமாக அமைந்துள்ளது.

ஒரு மிகப்பெரிய சமூகத்திற்கு தரமான மருத்துவச் சேவையை வழங்குவது என்பது சவாலாக இருந்தாலும் இங்குள்ள மருத்துவமனைகள் அந்த சவாலை சந்தித்து தங்கள் பணியைத் தொடர்கின்றன.

மேலும் அதை இன்னும் சிறப்புறச் செய்யும் வகையில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இது வளரும் மருத்துவ மாணவர்களுக்கு வரமாக இருப்பதோடு இதை இன்னும் அவர் உயர்நிலைக்கு எடுத்துச் செல்வார். அவரின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பால் சாத்தியமாக்கியுள்ள இம்முயற்சிக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கனவு இன்று மெய்ப்பட்டுள்ளது

கே. ராமசாமி, தலைவர், ரூட்ஸ் நிறுவனங்கள்.

கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி இப்படி ஒரு மருத்துவமனை துவங்கவிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு கடின உழைப்பாளி. நல்லம்பட்டி கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவில் உயர் கல்வி கற்று, இந்தியாவிற்கு ஒரு லட்சியத்துடன் திரும்ப வந்து, கோவையின் முதல் கார்ப்பரேட் மருத்துவமனையை நிறுவி, பல கல்வி நிறுவனங்களை திறம்பட நடத்தி சாதனை செய்து காட்டியவர்.

சாமானியர்களுக்கு சேவை செய்ய அவர் கண்ட கனவு இன்று மெய்ப்பட்டுள்ளது. அவருக்கு என் வாழ்த்துகள்.

அறிவும், திறனும் ஒன்றிணையும் இடம்

ரகுபதி வேலுசாமி, தலைமை நிர்வாக அதிகாரி, GKNMH

வை பகுதியில் நல்ல.ஜி. பழனிசாமி அவர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறந்த மருத்துவர்களை உருவாக்குவதில் உறுதுணையாக திகழும். இளம் தலைமுறை மருத்துவ மாணவர்களின் அறிவையும், திறனையும் மேம்படுத்தி அவர்களை சமுதாயத்தில் சிறந்த மனிதனாகவும், மருத்துவராகவும் திகழச் செய்வதற்கு இவ்விடம் நிச்சயம் அவர்களுக்கு உதவி புரியும்.

சிறந்த தலைமைப் பண்பைக் கொண்ட அவரின், தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய கல்வி மற்றும் மருத்துவச் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது.

மற்றுமொரு மைல்கல்!

D.நந்தகுமார், நிர்வாக இயக்குனர், செல்வம் ஏஜென்சிஸ்

மெரிக்காவில் உயர்கல்வியைக் கற்று அங்கு மருத்துவராகப் பணியாற்றிய நல்ல.ஜி.பழனிசாமி இந்தியாவிற்கு வரவேண்டும் என முடிவெடுத்து, தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டத்திற்கு தரமான மருத்துவ சிகிச்சையை வழங்கக் கூடிய மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்தார்.

அதுபோலவே, 30 ஆண்டுகளுக்கு முன்னால் கே.எம்.சி.ஹெச் என்ற மருத்துவமனையைத் தொடங்கி பல தரப்பட்ட துறைகளை உருவாக்கி இன்று ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக எழுச்சி பெற்றுள்ளது.

மேலும், கோவையில் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய மருத்துவக் கல்லூரியை நிறுவினார்.

இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும், பொது மக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கும் 750 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனையைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் இங்குள்ள மக்கள் நிச்சயம் பயனடைவார்கள். இந்த நேரத்தில் அவருக்கும், மருத்துவமனை குழுவினருக்கும், செவிலியர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அபரிமிதமான வளர்ச்சி!

டாக்டர் மிருதுபாஷிணி , டாக்டர் கோவிந்தராஜன், விமன்ஸ் சென்டர்

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ஒன்றாக படித்த நாங்கள் இருவரும் எங்கள் துறையில் சாதிக்க வேண்டும் என்ற பல கனவுகளோடு படிப்பை முடித்தோம். மருத்துவர் நல்ல.ஜி. பழனிசாமி அவரால் உருவாக்கப்பட்ட கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை இன்று கோவை பகுதியின் சிறந்த மருத்துவமனையாக உள்ளது.

கொங்கு பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் தனது சேவையை வழங்கி வருகிறது. அவரின் நீண்ட நாள் கனவான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கனவு இப்பொழுது நிறைவேறியுள்ளது. அதற்கு எங்கள் வாழ்த்தைத் தெரிவிக்கிறோம்.

தடைகளைத் தாண்டிய முயற்சி!

சி.ஏ. வாசுகி, செயலாளர், கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

மருத்துவர் நல்ல.ஜி. பழனிசாமி அவர்களை நினைக்கும் போதெல்லாம், ”மருத்துவக் கலை எங்கு நேசிக்கப்படுகிறதோ, அங்கே மனித நேயமும் இருக்கிறது” என்ற ஹிப்போகிரேட்ஸின் வரிகள் தான் என் நினைவில் தோன்றும்.

கே.எம்.சி.ஹெச் தனது மருத்துவ அத்தியாயத்தில் மற்றுமொரு புதிய தொடக்கமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறக்க உள்ளதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

மக்கள் சேவையை முதன்மையாகக் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிச்சயம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள். கோவை வாசியாகவும், ஒரு கல்வியாளராகவும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.