மதிப்பெண் மூலமாக திறனை மதிப்பிட முடியாது

– கே.பி.ஆர் கல்லூரியில் ஸ்ரீதர் வேம்பு உரை
 

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பாக நடைபெற்ற திறமை, எளிமை, பெருமை என்ற நிகழ்ச்சியில், ஜோஹோ பன்னாட்டு நிறுவனத்தின் நிறுவனர்-தலைவர் பத்மஸ்ரீ டாக்டர். ஸ்ரீதர் வேம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையில் கூறியதாவது: இந்தியாவில் நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்கள் வெளிநாட்டு தயாரிப்புகளாகவே உள்ளது. அதனால் நமக்கு தேவையான தயாரிப்புகளை நாமே தயாரிக்க வேண்டும். அதற்கான தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து, செயல்படுத்த நமது இளம் பொறியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றார். ஜோஹோ நிறுவனம், பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் திறனைக் கண்டு அவர்களைத் தேர்ந்தெடுத்து பிரத்தியோக பயிற்சி அளித்து வருகிறது.

தற்போது ஜோஹோ நிறுவனம் தங்களது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வசதிகளைக் கொண்டு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின்னணு சிப்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அவ்வாறே ஒவ்வொரு பொருளையும் நமது தொழில்நுட்பத்தினைக் கொண்டு நாமே தாயாரிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடையும் என்றார்.

மேலும் நமது நாட்டின் தொழிற்சாலைகள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களை கிராமப்புறங்களில் ஏற்படுத்தி நேரடி கிராமப்புற வேலைவாய்ப்புகளை தருவதுடன் மறைமுகமாகவும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சார்புத் தொழில்கள் வளர்ச்சி பெறும், இதன் மூலம் கிராமப் பொருளாதாரம் உயரும் என்றார்.

சுயமுயற்சி, விடாமுயற்சி, எடுத்த காரியத்தில் உறுதியாக இருத்தல் ஆகியவைகளும் வெற்றிக்கான காரணங்கள், வாழ்வில் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை கஷ்டமாக எடுத்துக்கொள்ளாமல் அதை ஏற்றுக் கொள்வதும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.

மாணவர்கள் நேர்முகத்தேர்வு மூலமாகவோ அல்லது அவர்கள் பெற்ற மதிப்பெண் மூலமாகவோ மாணவர்களின் திறனை மதிப்பிட முடியாது. மாணவர்கள் புதியவற்றை கற்றுக் கொள்வதில் உள்ள ஆர்வம், மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவையும் வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகளாக உள்ளது என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி மற்றும் கே.பி.ஆர் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் அனந்தகிருஷ்ணன், சக்திவேல் மற்றும் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா, கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி மற்றும் இருகல்லூரிகளின் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கே.பி.ஆர் நிறுவனத்தின் பணியில் இருந்துகொண்டே உயர்கல்வியை தொடரும் பணியாளர்களுக்கான கல்விப்பிரிவு மாணவிகளிடையே உரையாற்றினார்.