மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொசு தொல்லை: டெங்கு அச்சத்தால் ஊழியர்கள் தவிப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொசு தொல்லையால் ஊழியர்கள் பணி செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. அதோடு, ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் பள்ளி மற்றும் வெவ்வேறு அரசுத்துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் வீடுகள் தோறும் கொசு ஒழிப்பின் அவசியமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. அவ்வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் பல்வேறு அலுவல்கள் காரணமாக ஆட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்களும் கொசுக்கடியால் அவதிக்குள்ளாகி வருகிறனர்.

காலை முதல் மாலை வரை அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து பணியாற்றும் ஊழியர்கள் கொசுக்கடியால் டெங்கு காய்ச்சல் வந்துவிடுமோ என்ற தவிப்பில் உள்ளனர்.

அதிலும், குறிப்பாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடைக்கோடியில் அமைந்துள்ள கருவூலத்துறையில் பணியாற்றுபவர்கள் கொசுக்கடியால் கடுமையாக பாதிக்கபட்டு வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகமே தனது அலுவலகத்தை தூய்மையாக வைத்திருக்காமல் புதர் மண்டியும், குப்பைகளை தேக்கியும் வைத்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்துவதாக கூறும் ஊழியர்கள், தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் கொசுமருந்து தெளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.