இந்துஸ்தான் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும்!

– சரஸ்வதி கண்ணையன் பேச்சு

இந்துஸ்தான் கலை கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களின் வகுப்பு துவக்க விழா இன்று நடைபெற்றது.

கோவை அவிநாசி சாலை, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களின் வகுப்புகள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஷ் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சரஸ்வதி கண்ணையன் பேசியதாவது, “என்னுடைய மாணவர்கள் எங்கும் தோல்வி அடையக்கூடாது எங்கு சென்றாலும் வெற்றி அடைய வேண்டும் அதற்கு இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு அலுவலகம் தனியாக அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம். எனது மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும். மேலும், மாணவர்களின் அனைத்து தனித் திறமைகளையும் ஊக்குவித்து அவர்களின் சாதனைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பருவக்கட்டணத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கி அவர்களை மேலும் ஊக்குவிக்கிறோம்.

கல்வி என்பது ஒரு வரம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அவர்களை மேம்படுத்த எப்போதும் உறுதுணையாக இருக்கும். ஒவ்வொரு மாணவர்களும் உங்களுக்குள் இருக்கும் திறமைகளை உணர்ந்து அவர்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் அப்போதுதான் உங்கள் வாழ்வில் வெற்றி என்னும் சிகரத்தை எட்ட முடியும்” என்று பேசினார்.

மேலும் இந்துஸ்தான் கலை நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி கருணாகரன், முதல்வர் பொண்ணுசமி மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.