பழங்கள் சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்!

முடி உதிர்வு பிரச்சனை என்பது ஒரு பெரும் பிரச்சனையாகவே எல்லோருக்கும் உள்ளது. இதிலும் இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனை தொடங்கி இறுதியாக வழுக்கையில் போய் நிற்கிறது.

இந்த தலைமுறையினர் மிகப்பெரிய பிரச்சனையாக பார்ப்பது முடி உதிர்வை தான். உணவு, பழக்க வழக்கம், குடும்ப வாரிசு போன்ற காரணங்கள் பலருக்கு இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனை உள்ளது. இதனாலேயே பலருக்கு தன்னம்பிக்கை இழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கென சிலர்  லட்சக்கணக்கில் செலவு செய்தும் பயனில்லை என பலர் புலம்பி நாம் கேட்டிருப்போம். ஆனால், முடி உதிர்வு பிரச்சனையை ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவதன் மூலமே நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதுகுறித்து லண்டனை சேர்ந்த மருத்துவர் பஷர் பிஸ்ரா தெரிவிக்கையில், பெரும்பாலான மக்களுக்கு மரபணு காரணமாகவும், ஊட்டச்சத்து குறைவு, முடி வேர் சிதைவு, மன பிரச்சனை போன்ற காரணங்களால் முடி உதிர்கிறது என்கிறார். அந்த வகையில் முடிவு உதிர்வை தடுக்க மருத்துவர் பஷர் பரிந்துரைத்து உள்ள பழங்களை தற்போது காணலாம்.

பப்பாளி

முடிகளுக்கு தேவையான ஊட்டச் சத்துகளை முறையாக கொண்டு சேர்க்கும் திறன் பப்பாளி பழத்தில் இருக்கிறது. முழு பப்பாளியில் 235 மில்லி கிராம் விட்டமின் C சத்து இருப்பதால் புதிதாக முடி வளர்வதிலும் அது முக்கிய பங்கு வகிக்கிறது.

அன்னாசி

நமதூர்களில் எளிதில் கிடைக்கக் கூடிய விலை மலிவான ஒரு பழம் அன்னாசி. இதில் விட்டமின் C, மெக்னீசியம், விட்டமின் B6 ஆகிய தாதுக்கள் மட்டுமின்றி அதில் உள்ள ஃப்ளேவனாய்ட்ஸ் (Flavonoids) ஃபினோலிக் ஆசிட் (Phenolic acids) என்று சொல்லப்படும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் முடி வேர் செல்களில் சென்று அதன் சிதைவுகளை சீரமைத்து முடி உதிர்வை தடுக்கும்.

பீச் பழம்

முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதை போல், தலை முடி வறட்சியும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பீச் பழத்தில் இருக்கும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி சத்துக்கள் தலை முடியை வறட்சி அடைய விடாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. இதை பழச்சாராகவோ அல்லது நேரசியாக தலை முடிவின் அடிப்பகுதியில் தடவவோ செய்யலாம்.

கிவி பழம்

தலை முடியில் சீராக இரத்த ஓட்டம் இருந்தால் அது ஆரோக்கியமாக வளரும். இந்த பழத்தில் உள்ள விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் இ, விட்டமின் கே ஆகிய சத்துக்கள் மற்றும் மேக்னீசியம், பாஸ்பரஸ், ஒமேகா 3, ஃபேட்டி ஆசிட் போன்றவை இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும். இதனால் கருகருவென்ற தலைமுடியை பெறலாம்.

ஆப்பிள்

நாம் அனைவரும் அதிகம் சாப்பிடும் பழங்களில் ஒன்று ஆப்பிள். இதில் உள்ள விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி ஆகிய சத்துக்கள் பொடுகுத் தொல்லையில் இருந்து தீர்வு தருவதாகவும், அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் கெட்ட செல்களை நீக்கி முடிகள் சிதைவடைவதை பாதுகாத்து புதிய முடிகள் வளர உதவும் என ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.