கொங்கு மண்டலத்தில் ஸ்டாலினின் புதிய தளபதி?

அதிமுகவுக்கு சாதகமாகவும், திமுகவுக்கு எப்போதும் சவாலாகவும் இருக்கும் கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்தும் வகையில் மற்றொரு புதிய தளபதியாக நாமக்கல் கிழக்கு திமுக மாவட்டச் செயலரான கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரை, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார்.

திமுக சந்தித்த முதல் சட்டப்பேரவைத் தேர்தலான 1957ம் ஆண்டு முதலே கொங்கு மண்டலம் திமுகவுக்கு தொடர்ந்து சவாலாகவே இருந்து வருகிறது. அதேநேரத்தில், அதிமுக உருவாகிய பின் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என வாழையடி வாழையாக கொங்கு மண்டலம் தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது.

அந்த அதிமுகவின் கோட்டையை உடைக்கும் வகையில் திமுகவை வளர்த்தெடுக்கும் பணியில் முதல்வர் ஸ்டாலின் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதனால் தான் அடிக்கடி கொங்கு மண்டலத்துக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஸ்டாலின் கூடுதல் நலத்திட்ட, வளர்ச்சித் திட்டப் பணிகளை அறிவிப்பது, புதிய திட்டங்களை தொடங்கிவைப்பது என அரசு நிர்வாக ரீதியாகவும் செயல்பட்டு வருகிறார்.

தென்மாவட்டங்கள், டெல்டா மண்டலம், வடதமிழகம், சென்னை மண்டலம் ஆகியவற்றில் திமுகவுக்கு மக்கள் செலவாக்கு மிக்க தளபதிகள் இருப்பது போல கொங்கு மண்டலத்தில் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது. கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மட்டுமே பிற மண்டலங்களில் இருப்பது போன்ற தளபதியாக திகழ்கிறார்.

இதனால், அதேபோன்ற மக்கள் செல்வாக்கு மிக்க தளபதிகளை கொங்கு மண்டலத்தில் உருவாக்கினால் மட்டுமே திமுகவை வளர்த்தெடுக்க முடியும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கும் புதிய தளபதி தான் ராஜேஷ்குமார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் அதிமுக அதிக வெற்றிகளை குவித்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் திமுக 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ராஜேஷ்குமார்.

ராஜேஷ்குமார் பொறுப்பு வகிக்கும் நாமக்கல் கிழக்கு மாவட்டப் பகுதியில் உள்ள நாமக்கல், சேந்தமங்கலம், திருச்செங்கோடு தொகுதியில் திமுக வெற்றிபெற்றது. இந்த மூன்று தொகுதிகளுமே பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாகத் திகழ்ந்தவை.

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபின் கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகரித்து வந்த நிலையில், அதற்கு எதிராக பிற சமூகங்களை ஒருங்கிணைக்கும் முக்கிய களப்பணியில் ஈடுபட்டவர் ராஜேஷ்குமார். நாட்டுக்கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமாருக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், கொங்குவேளாள கவுண்டர் ஆதிக்கத்துக்கு சரியான போட்டியைக் கொடுத்து சிறிய எண்ணிக்கை சமூகங்களை ஒருங்கிணைத்து திமுகவை வளர்க்க முடியும் என்பது திமுகவின் கணக்கு.

அதனால் தான், இப்போது அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார் என்கின்றனர் அரசியல் உற்றுநோக்கர்கள். நாமக்கல் மாவட்ட அரசியலைப் பொறுத்தவரை கொங்கு மண்டலத்தில் இருக்கிறது என்பதால் இயல்பாகவே அதிமுக பலம் வாய்ந்த பகுதியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுகவின் நாமக்கல் மாவட்ட முகமாக மாறியப்பின்னர், அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இம்மாவட்டம் மாறியது.

2009 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் காந்திசெல்வன் இப்பகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராக பதவியேற்றும்கூட, அவராலும் 2011 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பெரிதாக வெற்றியை தேடித்தர முடியவில்லை. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் நடந்த சமூகப் பரிமாற்றத்தில் திமுக அங்கு வலுப்பெற்றது. அதை தக்கவைக்கவே ராஜேஷ்குமார் மாவட்டச் செயலராக்கப்பட்டார்.

இந்த முடிவு நாமக்கல் மாவட்டத்தில் கொங்கு வேளாள கவுண்டர் அல்லாத பிற சமூகத்தினருக்கு பெரும் தெம்பைக் கொடுத்தது. கருணாநிதி காலத்தில் அவர் கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ், தமாகா, பாஜக, இடதுசாரிகள் என கூட்டணி கட்சிகளை நம்பியே அரசியல் செய்வார். ஆனால், ஸ்டாலினோ சொந்த பலத்தில் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறிய எண்ணிக்கை சமூகங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாகவே நாமக்கல் மாவட்டத்தில் ராஜேஷ்குமாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதே பாணியில் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளிலும் பின்பற்றினால் திமுக கொங்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வளரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

குறிப்பாக, 2021 பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 64 பேரவைத் தொகுதிகளில் 44 இடங்களை அதிமுக கைப்பற்றியது அரசியல் நோக்கர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏன் திமுக தலைவர் ஸ்டானினுக்கே கூட பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

இதற்கு காரணம், அப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கு உள்ள கொங்கு வேளாளர் கவுண்டர்கள், தங்களது சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அதிமுகவுக்கு முழுமையாக வாக்களித்தனர். அதேபோல அங்கு மூன்றில் ஒரு பகுதி உள்ள மொழிவழி சிறுபான்மையினரில் பெரும்பகுதி அதிமுகவுக்கு வாக்களித்தனர்.

இதற்குக் காரணம், இப்பகுதியில் தேசிய எண்ணம் அதிகமாக ஊடுருவியுள்ளது தான். இதற்கு எடுத்துக்காட்டு 1957, 1962 பேரவைத் தேர்தல்களில் இங்கு திமுகவுக்கு உள்கட்டமைப்பே இல்லை. 1989 பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தபோது கூட இப்பகுதியில் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஏனெனில் இப்பகுதி ஜி.கே.மூப்பனாருக்கும், ஜெயலலிதாவுக்குமே ஆதரவை அளித்தது.

கருணாநிதி கடைசி வரை கொங்கு மண்டலத்தில் திமுகவை வளர்த்தெடுக்கும் முயற்சியை செய்யாமலே சென்றுவிட்டார். ஆனால், தற்போது ஸ்டாலின் அதற்கு மாற்றாக கொங்கு வேளாள கவுண்டர் அல்லாத சமூகங்களை தன்பக்கம் இழுக்கும் உத்தியைக் கையாண்டு வருவதாகத் தெரிகிறது. இதற்கு முக்கிய அம்சம் இப்பகுதியில் சென்னை, வட தமிழகம், டெல்டா பகுதிகளை போல மொழி உணர்வையோ அல்லது திராவிட சித்தாந்தத்தையோ சொல்லி கொங்கு மண்டலத்தில் வளர்வது கடினம்.

சமூக அரசியலுடன் மென்மையான இந்துத்துவாவை கடைபிடிப்பதன் மூலம் தான் திமுகவை கொங்கு மண்டலத்தில் வளர்க்க முடியும். அதையும் ஸ்டாலின் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளார் என்றே தெரிகிறது.

அதன் முதல்படியாக தான், நாமக்கல்லில் கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரை மாவட்டச் செயலர், மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புகளை கொடுத்து முக்கிய அதிகார மையமாக மாற்றியுள்ளார்.

இதைப்போல, கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களில் மென்மையான இந்துத்துவா எண்ணம் கொண்ட சிறிய எண்ணிக்கை சமூகங்களை கையில் எடுத்து அரசியல் செய்தால் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், பின்வரும் மக்களவை, பேரவைத் தேர்தல்களிலும் வியக்கத்தக்க வெற்றியை அடைய முடியும்.

அடுத்த 5 ஆண்டுகளும் தானே வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் அரசில் செய்து வருகிறார். அப்படிப்பட்ட எண்ணம் கொண்ட ஸ்டாலின் கருணாநிதி பாணியில் கொங்கு மண்டலத்தில் கூட்டணிக் கட்சிகளை நம்பி இருக்காமல், திமுகவை தனிப்பட்ட முறையில் வளர்த்தெடுக்க தொடர்ந்து புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறார் என்பது தான் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது உண்மை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

நகர்புற உள்ளாட்சிக்கு உதவும்

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பின்னடைவை சந்தித்த பிறகு ஸ்டாலின் கொங்கு பகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற வியூகத்திலேயே செயல்பட்டு வருகிறார்.

அப்படியே நாமக்கல் மாவட்டத்தில் அதிக இடங்களை வெற்றி பெற செய்த மாவட்ட செயலாளர் ராஜேஷ் குமாரை மாநிலங்களவைக்கு தேர்வு செய்துள்ளார் ஸ்டாலின். இதுபோன்று இனி வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் சிறிய எண்னிக்கை சமுதாயங்களை ஆதரித்து கொங்கு மண்டலத்தை கைப்பற்ற முயல்வார் என்றார் ரிஷி.