உங்களின் அலட்சியமே ஆபத்தாகலாம்!

-டாக்டர் ரூபா, மார்பகப் புற்றுநோய் கதிரியக்க நிபுணர், கே.எம்.சி.ஹெச்

50 வயதுக்கு மேற்பட்ட பெண்களைப் பாதித்து வந்த மார்பகப் புற்றுநோய் தற்போது 30 வயதுகொண்ட பெண்களையும் பாதிக்கிறது. உலகளவில் இந்தியாவிலும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் என்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களின் புள்ளி விவரங்கள் தெரிகின்றன.

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு (அக்டோபர்) மாதத்தில் மருத்துவ மனைகள், தன்னார்வ நிறுவனங்கள் பிரசாரங்களை மேற்கொண்டு வரு கின்றன. இந்நிலையில் ஆண்டுதோறும் கே.எம்.சி.ஹெச் சார்பாக மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் சலுகை விலையில் வழங்கப்படுவதோடு பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் பெண்களிடம் விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், இதுகுறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் கதிரியக்க நிபுணர் மருத்துவர் ரூபாவிடம் பேசியபோது அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:

மார்பகப் புற்றுநோய் ஏற்படக் காரணம்?

மார்பகப் புற்றுநோயை பொறுத்த வரை குறிப்பிட்ட ஒரு காரணி மட்டுமே நோயை ஏற்படுத்துகிறது எனக் கூற முடியாது. தாமதமாக திருமணம் செய்வது, அதனால் குழந்தைப் பிறப்பில் தாமதம், உடல் எடை, புகை பிடித்தல், ஆல்கஹால் போன்றவை இப்புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணிகளில் ஒன்றாக உள்ளன.

மேலை நாடுகளில், 50 வயதைத் தாண்டியவர்கள் அதிகமாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டில் நான்கு மடங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. அதிலும் 30 – 40 மற்றும் 40 – 50 க்கு இடைப்பட்ட வயதினர் இடையே மார்பகப் புற்றுநோயை காணமுடிகிறது.

ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இருப்பினும் ஆரம்ப நிலையில் கண்டறிவது மட்டுமே ஒரே தீர்வாக உள்ளது. கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது பாதிப்பு அதிகரிக்கலாம். மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளக்கூடிய நபருக்கும் புற்றுநோய் வரலாம்.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப் பட்ட 100 பேரில் 70 – 80% பேருக்கு எந்தவித ஆபத்து காரணிகளோ, பரம்பரை பாதிப்போ, மரபணு குறைபாடோ இருப்பதில்லை. 10 – 15% பேருக்கு பரம்பரையில் யாருக்காவது இந்நோய் இருந்தால் அதன் மூலம் பாதிப்பு ஏற்படலாம். மிக சிறிய அளவிலே மரபணு குறைபாட்டினால் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.

விழிப்புணர்வு பெண்களிடம் அதிகரித்து விட்டதா?

இல்லை. பெரிய விழிப்புணர்வு இல்லை. பரிசோதனைகள் உள்ளது என்பதையே பலரும் அறியாமல் உள்ளனர். கட்டி இருந்தது, ஆனால் அது வலியை ஏற்படுத்தவில்லை என்று கூறும் பெண்கள் அதிகளவில் உள்ளனர். மார்பகத்தில் கட்டி உருவாகும் போது ஆரம்ப நிலையில் நிச்சயமாக வலி தோன்றாது. ஆனால் வலியை உண்டாக்காத கட்டியைத் தான் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான பெண்கள் கேன்சர் கட்டிகள் வலியை ஏற்படுத்தக் கூடியது என நினைத்து தங்களுக்கு இருக்கும் வலி இல்லாத கட்டியை சாதாரணமாக நினைத்துக் கொள்வதால் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கக் கூடிய ஆரம்ப நிலையை தவறவிடுகின்றனர்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் நிச்சயமாக குணப்படுத்த முடியும். மார்பகத்தில் இருக்கும் கட்டி கேன்சர் என கண்டறியபட்டால் அதற்கு பயம் கொள்ளத் தேவையில்லை. அதேபோல, மார்பகத்தில் தோன்றும் கட்டிகள் கேன்சர் கட்டிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீர்க்கட்டியாக கூட இருக்கலாம். இருப்ப்பினும் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது தான் என்ன வகையான கட்டி என்பதைக் கண்டறிய முடியும். மேலும் ஏதேனும் கட்டி இருப்பது கண்டறியப் பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.

எந்த நிலையில் நோயாளிகளை காண்கிறீர்கள்?

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப் பட்ட பெண்களில் அனைத்து நிலை களிலும் நோயாளிகளைக் காண்கிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை 50 – 60% பேர் நோய் மேம்பட்ட நிலையிலே மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால் மேலை நாடுகளில் 5 – 10% பேர் தான் மேம்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனர். மார்பகப் புற்றுநோயின் முற்றிய நிலையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது நோயின் தன்மை தீவிரமாகி வாழ்நாள் குறையும் வாய்ப்புள்ளது.

விழிப்புணர்வு ஏன் குறைவாக உள்ளது?

இந்தியாவில் மார்பகப் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்த கணிப்பைத் தாண்டி அதிகரித்து செல்கிறது. பெண்கள் தங்கள் உடல் நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்காததும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. “கட்டி வலியில்லாமல் இருந்தது அதனால் மருத்துவமனைக்கு வரவில்லை எனக் கூறுகிறார்கள்”. வலியில்லாத கட்டியைத் தான் முதலில் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களிடம் இருப்பதில்லை. பரிசோதனையில் கேன்சர் என கண்டறியப்பட்டால் அதை எதிர் கொள்வதில் அவர்களுக்கு நடைமுறைச் சிக்கலும், தயக்கமும் உள்ளது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் ஆரம்ப நிலை மார்பகப் புற்றுநோயுடன் வருபவர்களுக்கு breast-conserving surgery மூலம் மார்பகத்தை எடுக்காமல் சிகிக்சை அளிக்கிறோம். புற்றுநோய்க் கட்டி சிறியதாக இருந்தால் கட்டியை மட்டும் நீக்க கூடிய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கக் கூடிய ரேடியோ தெரபியில் மேம்பட்ட உபகரணங்கள் எங்கள் மருத்துவமனையில் உள்ளன. மேலும் ரேடியேஷன் அளிக்கும்போது நுரையீரல் பாதிப் படைவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது இருக்கக் கூடிய அட்வான்ஸ்டு டெக்னாலஜியின் மூலம் நுரையீரல் பாதிப்பு மிக குறைவாகவே உள்ளது.

கே.எம்.சி.ஹெச் –ல் உள்ள அட்வான்ஸ்டு டெக்னாலஜி?

மார்பகப் புற்றுநோயை கண்டறிவதற் கான அனைத்து பரிசோதனைகளும் இங்குள்ளது. மேலும் அதிநவீன 3ஞி மேமோகிராபிக் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படும் போது மிகவும் துல்லியமாக இருப்பதோடு 4 நொடிகளில் உயர்தர 3D படமாக கிடைத்து விடுகிறது. சுயபரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாத ஆரம்ப நிலை கட்டிகளைக் கூட மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியும். அதனால் 40 வயதைத் தாண்டியவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கும் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவது போல தங்கள் உடல்நலனில் அக்கறை கொண்டு முக்கியத்துவம் தரவேண்டும். அவர்களின் உடல் பாதிக்கப்பட்டால் அது அவர்களின் குடும்பத்தையே பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.