ஆயுத பூஜை: அதிகரித்த பூக்கள் மற்றும் பழங்கள் விலை

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள் மற்றும் பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பூஜைக்கு தேவையான பொருட்களை கடைவீதிகளில் வாங்கிச் சென்றனர்.

ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களுக்கு பூஜை செய்வது வழக்கம். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள்.
ஆயுத பூஜையின் போது பொதுமக்கள் பூக்கள், பழங்கள், வாழை கன்றுகள், பொரி, சுண்டல் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபாடு செய்வார்கள். இதனால் பூஜை பொருட்கள் மற்றும் பூக்கள் வாங்க கோவையில் பூ மார்க்கெட் மற்றும் கடைவீதிகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தொடர் மழை மற்றும் வாடிக்கையாளர்கள் கூட்டம் காரணமாக பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்ந்துள்ளது.

தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள கோவையில்தான் ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்படும். தற்போது தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருவதால், பூக்கள் அழுகியும், வாடியும் வரத்து குறைந்துள்ளதாகவும் இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்த வியாபாரிகள், வழக்கமாக ஆயுத பூஜைக்கு 2 முதல் 3 டன் பூக்கள்தான் விற்பனைக்கு வரும் எனவும், ஆனால் இந்த ஆண்டு 15 டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் கிலோ ஒன்று 500 ரூபாய்க்கு விற்ற மல்லிகை தற்போது 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் கடந்த வாரம் 400 ரூபாய்க்கு விற்ற ஜாதி மற்றும் முல்லை தற்போது 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆயுத பூஜைக்கு அதிகம் விற்பனையாகும் செவ்வந்தி பூ கிலோ 200 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையும், அரளி கிலோ 350 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை 70 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இதேபோல் 1½ அடி மாலை 150- ரூபாய்க்கும், 2 அடி மாலை 200 ரூபாய்க்கும், 2 அடி ரோஜாப்பூ மாலை 250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

3 அடி உயரம் கொண்ட வாழைக்கன்று ஒரு ஜோடி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மாந்தளிர் தென்னங்குருத்து உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் இன்று மாலை மற்றும் நாளை காலை பூக்கள் மற்றும் பழங்களின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் மழை காரணமாக பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் வரத்து குறைந்து பன்னீர் திராட்சை விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்ற பன்னீர் திராட்சை தற்போது 100 ரூபாய் முதல்120 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆப்பிள் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், சாத்துக்குடி 80 ரூபாய்க்கும், ஆரஞ்சு 60 ரூபாய்க்கும், மாதுளை 200-ரூபாய்க்கும் விற்பனை விற்பனையாகின்றன.

இதேபோல் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பூவன் வாழைத்தார் விலை தாறுமாறாக ஏறியுள்ளது. கடந்த வாரம் 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட வாழைத்தார் தற்போது 1,400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பூவன் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 800-ரூபாய்க்கும், கற்பூரவள்ளி தார் ஒன்று 600-ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பொதுமக்கள் கூட்டம் காரணமாக பூ மார்க்கெட் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போலீசார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.