பேட்டரி மூலம் இயங்கும் ஷட்டில் வாகனம்: கே.பி.ஆர்.பொறியியல் மாணவர்களின் புதிய முயற்சி

கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் மின்சார பேட்டரி மூலம் இயங்கும் ஷட்டில் வாகனத்தை உருவாக்கி வடிவமைத்துள்ளார்கள். இது ஒரு நிறுவனத்தின் வளாகத்திற்குள் இயக்குவதற்கு பயன்படுகிறது.

கல்லூரியின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி மற்றும் கல்லூரியின் முதல்வர் அகிலா ஆதரவோடு கல்லூரியின் மெக்கானிக்கல் துறைத்தலைவர் ரமேஷ்பாபு மற்றும் செந்தில்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலில் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மரியராஜ் மனோஜ், ரூபன், குமார், மனோகர், சரண்கிருஷ்ணா, சண்முகேஸ்வரன் யஸ்வந்த் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுடன் இணைந்து இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் மின்சார பேட்டரி வாகனத்தில் சோலார் பேனல்கள் இல்லை ஆனால் இந்த வாகன வடிவமைப்பில் சோலார் பேனல் மூலமாக தானாகவே பேட்டரி சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கியர் சிஸ்டம் பயன்படுத்தி உள்ளதால் இதன் மூலம் அதிகபட்சம் 45 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க முடியும். மிகக் குறைந்த நேரத்தில் அதாவது 2 மணி முதல் 3 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 முதல் 80 கிலோமீட்டர் வரை இடைவிடாமல் இயங்கக்கூடியது.

மேலும் இந்த வாகனத்தின் மூலம் காற்று மாசுபடுதல் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற வாகனத்தை இயக்கும் போது ஏற்படும் வெப்பத்தினால் காற்றின் ஈரப்பதம் பாதிக்கப்படுகிற நிலை இந்த வாகனத்தில் அது 98% வரை குறைக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் நீட்டி, மடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் தேவையான நேரத்தில் சரக்கு வாகனமாகவும் பயன்படுத்தலாம்.

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதோடு இதன் தயாரிப்பு செலவு சுமார் 2 லட்சத்திற்கும் குறைவு என பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.