தயக்கத்தைப் போக்கி தன்னம்பிக்கை ஏற்படுத்தும் முடிதானம்!

புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும்போது முடி உதிர்வு என்பது இயற்கையாகவே இருக்கும். மேலும் பெரும்பாலான பெண்கள் தங்கள் கூந்தல் மீது அதிக விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கையில் தலை முடி தானம் செய்ய எத்தனை பெண்கள் முன் வருவார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு தான். ஆனால் இதுபோன்ற மனநிலை பெண்களிடம் இல்லை என்றே கூற வேண்டும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முடி இழப்பை எதிர்கொள்ளும் பலருக்கும் தாங்களாகவே முன் வந்து பலரும் முடி தானம் செய்கின்றனர்.

பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது ஏற்படும் முடி உதிர்வினால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சமூகத்தில் சில தயக்கங்களையும் எதிர் கொள்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் தயக்கங்களை நீக்கி தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக பலரும் முடிதானம் செய்ய முன் வருகின்றனர்.

மேலும் புற்றுநோய் சிகிச்சையில் ஏற்படும் முடி உதிர்வினால் சிகிச்சைக்கு பின் வாங்கும் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செரியன் பவுண்டேஷன் மற்றும் நேச்சுரல்ஸ் உடன் இணைந்து ஹேர் டூ ஷேர் என்ற நிகழ்வு பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் முன்னெடுப்பில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி மற்றும் பார்மசி கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் என 60க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் முடியை வழங்கினர்.

மேலும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட முடியால் செயற்கை சிகை அமைப்பு சென்னையில் உள்ள செரியன் பவுண்டேசனால் தயாரிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

இந்த முடிதான நிகழ்விற்கு பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி முதல்வர் ஜெயசுதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பிரிசில்லா ஒருங்கிணைத்தார்.