பா.ஜ.க வேட்பாளருக்கு குடும்பத்தார் வாக்களிக்காதது உண்மையா?

கோவையில் கிராம ஊரட்சிக்கான வார்டு உறுப்பினர் தேர்தலில் பா.ஜ.க ஆதரவு வேட்பாளர் ஒரு ஓட்டு வாங்கிய நிலையில், அவருக்கு அவரது குடும்பத்தாரே வாக்களிக்கவில்லை என்பது டிரெண்ட் ஆகி வரும் சூழலில், அதன் உண்மைத் தன்மை தற்போது வெளியாகியுள்ளது.

கோவை குருடம்பாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க ஆதரவு வேட்பாளர் கார்த்திக் போட்டியிட்டு ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்றார். அவரது குடும்பத்தில் 5 பேர் இருந்தும் அவர்களே கார்த்திக்கிற்கு வாக்களிக்கவில்லை என்ற தகவல் சமூக ஊடங்களில் வேகமாக பரவியது. இந்திய அளவில் இந்த சம்பவம் டிவிட்டரில் முதல் இடத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது.

இந்த நிலையில், அதன் உண்மை தன்மை தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரம் :

கோவை குருடம்பாளையம் 9 வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திக் அதே பகுதியில் 4 வது வார்டில் வசிப்பவர். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் 4 வது வார்டில் தான் வாக்குரிமை உள்ளது.

இதனால் அவரோ அவரது குடும்பத்தாரோ வாக்களிக்க முடியாத் சூழல் ஏற்பட்டது. கார்த்திக்கிற்கு அவரை வேட்பாளராக களமிறக்க முன் மொழிந்தவரோ அல்லது வழி மொழிந்தவரோ யாரேனும் ஒருவர் தான் அந்த வாக்கை செலுத்தியிருக்க முடியும்.

இந்த சூழலில், குடும்பமே வாக்களிக்கவில்லை என்று பரவிய செய்தியால் பாஜக பிரமுகர் கார்த்தி மன உளைச்சல் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதேபோல் இந்த வார்டில் தேமுதிகவை சேர்ந்த ரவிகுமார் என்பவர் இரண்டு ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளார். அவரும் இந்த வார்டை சேர்ந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.