மண் சார்ந்த மரங்களை மாவட்டம் தோறும் வளர்க்க வனத்துறை திட்டம்  

கோவை, வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனஉயிர் பயிற்சியகத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர், அதிமுக ஆட்சியில் வன விலங்குகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்கவில்லை எனவும் 6 கோடி வரையிலான தொகையை மக்களுக்கு கொடுக்காத அரசாக அதிமுக அரசு இருந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்ககோரி முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளதாகவும், வன விலங்குகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படமால் இருக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளைக் எடுக்கவருவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மண் சார்ந்த மரங்களை மாவட்டம் தோறும் வளர்க்க வனத்துறை திட்டமிட்டுள்ளதாகவும், அயல்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தைல உள்ளிட்ட மரங்களைக் அகற்ற இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

T23 ஆட்கொல்லி புலியை பிடிக்க கேரளாவிலிருந்து வனத்துறையினரும் வந்துள்ளதாகவும், புலியைக் பிடிக்கும் போது மழை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் வருவதால் சற்று சிரமமாக உள்ளது. புலி ஆரம்பத்தில் சுற்றி திரிந்த இடமான தேவன் எஸ்டேட் பகுதியிலும் 30 வனத்துறையினர் புலியை தேடி வருவதாகவும், அறிவியல் பூர்வமாக தொழில்நுட்ப ரீதியில் உயர்ரக கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகவும் புலியை தேடி வருகின்றனர். புலி வேறு இடத்திற்க்கு சென்று விட்டதா என்பதையும் தொடர்ந்து கண்கானிப்பு கேமரா மூலமாக கண்காணிக்கப்படுகிறது. கூடிய விரைவில் புலியை பிடித்துவிடுவோம்

மேலும் சிங்கார காட்டு பகுதியில் வேறு புலிகளும் இருப்பதால் அதையும் கவனத்தில் கொண்டு தான் இந்த புலியை பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வனத்தையொட்டிய அரசு தரிசு நிலங்களில், அந்த பகுதியொட்டி வசிக்கின்ற மக்களின் கால்நடைகளை மேய்பதற்காக புற்கள் நடப்பட்டு கால்நடைகள் வனப்பகுதிக்குள் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.