வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டனர் – அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை சித்தாபுதூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்

அதில் அவர் கூறியுள்ளதாவது:

உத்தரபிரதேசத்தில் நடந்தது துயர சம்பவம். அம்மாநில முதல்வர் இதற்கு காரணமானவர்களை யாராக இருந்தாலும் என்ன காரணமாக இருந்தாலும் விட மாட்டோம் என சொல்லியுள்ளார். அரசு வேலை, இழப்பீடு உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த காரை ஓட்டியவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக்கூடாது. சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வரும் உத்தரப்பிரதேசம் அரசு, நிச்சயமாக எந்த தரப்புக்கும் பாதிக்காதவாறு முடிவு எடுக்கும்.

வேளாண் சட்டத்தை எதிர்த்து எந்த விவசாயியும் தமிழகத்தில் போராட்டத்தை முன்வெடுக்கவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே ஒப்பந்த முறை உள்ளது. முட்டை, கோழி உள்ளிட்டவை ஒப்பந்த அடிப்படையில் தான் வாங்கி வருகிறோம். இது யாருக்கும் எதிரான சட்டம் இல்லை என்பதற்கு சான்றாக விவசாயி யாரும் போராட்டம் செய்யவில்லை. இந்திய அளவில் எதிர்க்கட்சி, தமிழக அளவில் ஆளுங்கட்சியான திமுக அகில இந்திய பந்திற்கு அழைப்பிற்கு விடுத்தபோது கூட, எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனெனில், சாதாரண மக்கள் யாரும் பங்கு பெறவில்லை. வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

சில மாநிலங்கள் பஞ்சாப், ஹரியானா, சில விவசாய சங்கங்கள் பிரதமர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள் தான் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாய சட்டங்களில் இதனால் பாதிப்பு என குறிப்பிட்டு சொன்னால் மாற்ற அரசு தயாராக உள்ளது எனக்கூறியும், யாரும் எதுவும் குறிப்பிட்டு சொல்லவில்லை என பிரதமர் பேட்டி அளித்துள்ளார். உச்ச நீதிமன்றம் கூட வேளாண் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ள போதும், ஏன் போராட்டம் நடைபெறுகிறது என கேள்வி எழுப்பியுள்ளது. அதனால், வேளாண் சட்டம் போராட்டம் வேறு, உ.பி., சம்பவம் வேறு. போராட்டம் செய்வது அரசியல் கட்சிகள்.

அரசை பொறுத்தவரை நியாயமான முறையில் எந்த குரல் கொடுத்தாலும் செவி சாய்த்து சரி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. இத்தனை ஆண்டுகளாக நன்றாக சென்றுக்கொண்டிருக்கிற கூடங்குளம் அணு உலை, சர்வதேச தரத்தில் அனைத்து பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி வரும் நிலையில், எந்த பிரச்னையும் இல்லாதபோது பிரச்சினை கிளப்புவது அரசியல் காரணங்கள் தான்.

பெட்ரோல், டீசல் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. 2016லிருந்து பெட்ரோலிய அமைச்சர் சொல்லி வருகிறார். 2017முதல் பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது தற்போது முடிவடையும் காலம் வந்துவிட்டது. அடுத்த கட்டமாக அதை ஜி.எஸ்.டி., க்குள் கொண்டு வர யோசனைகளில் இயங்கி வருகிறது.

T23 புலி விவகாரத்தை பொறுத்தவரை அறிவியல் ரீதியாக அணுக வேண்டும். வனத்துறையின் முடிவு சரியானதாக இருக்கும். அதற்கு கட்டுப்படுவோம். 7ம் தேதி காலை 11 மணிக்கு தமிழகத்தில் கோவில்களில் அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.