‘மிஸஸ் ஏசியா குயின் – 2021’ பட்டத்தை வென்ற சோனாலி பிரதீப்

மும்பையில் நடைபெற்ற குயின் ஆப் ஏசியா இண்டர்நேஷனல், விழாவில் திருமதி ஏசியா குயின் 2021 என்ற விருதினைப் பெற்றுள்ளார் சோனாலி பிரதீப்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சோனாலி பிரதீப். இவரது கணவர் பிரதீப் ஜோஸ். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உடைய சோனாலி, இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடந்த அழகிப் போட்டிகளில், மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ், மிஸஸ் எர்த் என பல அழகிப் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர்.

அதிமுக கோவை வடக்கு பகுதி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் துணை செயலாளராகவும், அம்மா சேவா டிரஸ்ட் எனும் தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வரும் இவர், இவரது அறக்கட்டளை மூலமாக ஏழை எளியோருக்கு நலத்திட்டங்கள், கல்வி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல் என சமூக பணிகளில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் மும்பையில் நடைபெற்ற குயின் ஆப் ஏசியா இண்டர்நேஷனல் எனும் போட்டி மற்றும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இவர், மிஸஸ் ஏசியா குயின் 2021 எனும் பட்டத்தையும் வென்றுள்ளார். மி்ஸஸ் குயின் பட்டம் வென்று கோவை விமான நிலையம் வந்த சோனாலி பிரதீப்பிற்கு, அதிமுக மகளிர் அணியினர், சோனாலியின் கணவர் பிரதீப் ஜோஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ரோட்டரி கிளப் ஆப் அக்ருதி சார்பாக அதன் தலைவர் கவிதா உட்பட பலர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோனாலி பிரதீப், தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டு இந்த பட்டம் வாங்கிய ஒரே பெண் என்பதில் தாம் பெருமிதம் கொள்வதாகவும், இது போன்ற விருதுகளால் கூடுதல் பொறுப்புகள் வந்துள்ளதாக கூறிய அவர் எல்லா பெண்களாலும் இது போன்று சாதிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.