வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் செல்ல தடை

மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர் மழை பெய்து வருவதால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் பல வாரங்களாக மூடப்பட்டு கடந்த 6ம் தேதி கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக கடந்த மாதம் 13ம் தேதி கோவை குற்றாலம் மூடப்பட்டது. மழைவரத்து குறைந்து குற்றால அருவிகளில் நீர்வரத்தும் குறைந்ததால் கடந்த மாதம் 20ம் தேதி மீண்டும் கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கொரோனா தாக்கத்தால் கோவை குற்றாலத்துக்கு செல்ல விரும்புவோர், ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கடந்த இரண்டு வாரங்களாக கோவை மாவட்டம் ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருகிறது, இந்த நிலையில் மீண்டும் கோவை குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.