“தென்னகத்தின் உணவு பிதாமகர்”: தாமோதரசாமி நாயுடு

ஶ்ரீ அன்னபூர்ணா நிறுவனர் தாமோதரசாமி நாயுடு பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அக்டோபர் 4ம் தேதி உணவக தினமாக கொண்டாடப்படுகிறது. உணவுத் தொழிலுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இவர் தமிழகம் முழுவதும் சிறந்த உணவு நிறுவனங்களை உருவாக்க பல விதங்களில் பாடுபட்டு உள்ளார். இந்நிலையில் இவரது 95 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் சார்பில் உணவக தினம் விழா இணைவழியில் திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

“தென்னகத்தின் உணவு பிதாமகர், புதிய விசயங்களை கற்றுத் தருபவர், அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர், உருவத்தால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்தவர்” என இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் தாமோதரசாமி நாயுடு குறித்து பேசினார்கள்.

சிறப்பு விருந்தினராக நமது நம்பிக்கை மாத இதழ் முத்தையா கலந்து கொண்டு பேசுகையில்: விருந்தோம்பல், பரிவு, கனிவு, தெளிவு, பக்குவம் போன்ற பண்புகளினால் தாமோதரசாமி நாயுடு அவர்கள் அமுத செம்மல் எனப் போற்றப்படுகிறார். அவர் தோன்றாமல் இருந்திருந்தால் உணவுத் தொழிலில் மறுமலர்ச்சி வந்திருக்குமா என்பதே  சந்தேகமே எனக் கூறினார். உணவுத் துறையில் பக்குவப்பட்டு அந்த துறைக்கே ஓர் அடையாளமாகத் திகழ்ந்தவர். மேலும் அவர் தனது உரையில், அருகே சில அபூர்வங்கள் என்ற தலைப்பில் ஆளுமைகளுக்கு அருகே சில அபூர்வங்களும் இருந்து இருக்கிறார்கள் என பல கதைகளின் வழியாக எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர சட்டத்தில் உணவகங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து வேலூர் மாவட்ட தொழில்கள் மைய உயர் அலுவலர் சுபாஷ் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஹோட்டல் அசோசியேசன் செயலாளர் ஶ்ரீனிவாசன், தலைவர் வெங்கடசுப்பு, கௌரவத் தலைவர் ரவி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தாமோதரசாமி நாயுடு அவர்களின் மகனும், ஶ்ரீ அன்னபூர்னா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஶ்ரீனிவாசன் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.