கொண்டனூர் கிராமத்தில் சோலார் விளக்குகள்: ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி சார்பில் உதவி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் இயற்பியல் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட சார்பில், ஆனைக்கட்டியில் உள்ள கொண்டனூரில் வசிக்கும் கிராம மக்கள் பயன்பாட்டிற்காக சோலார் விளக்குகள் பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். இயற்பியல் துறைத்தலைவர் பூங்குழலி வரவேற்றார்.  பெரியநாயக்கன்பாளையம் கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சோலார் விளக்குகள் பொருத்தும் பணியைத் தொடங்கி வைத்து உரையாற்றினர்.

அப்போது அவர் கூறியதாவது: சேவை என்ற ஒரே நோக்கத்துக்காகவே ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இவ்வளவு தொலைவில் உள்ள இந்த கிராமத்தைத் தேடி வந்துள்ளது. எதையும் கடமைக்குச் செய்யாமல் சேவையாக செய்ய வேண்டும் என்பதை இச்செயல் நமக்குக் காட்டுகிறது.

இதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு, கோவை மாவட்டக் காவல்துறை சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரச்சினைகளுக்கு மட்டும் காவல்துறையை அணுகாமல் உங்களுக்கு உதவிகள் தேவைப்பட்டாலும் எங்களை அணுகலாம். உங்களுக்கு உதவ காவல்துறை காத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நாட்டு நலப்பணித் திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் செல்லையா பேசும்போது, இதுபோன்ற பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்வி மட்டுமே ஒருவரை வாழ்வில் உயர்வடையச் செய்யும். எங்களைப் போன்ற அரசு அதிகாரிகள் உங்களைத் தேடி வருவது, நாளை எங்களைப் போல நீங்களும் உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான். நீங்கள் நன்றாக கல்வி கற்று இன்றும் ஒரு 10 ஆண்டுகளில் இருந்து இப்பகுதியில் இருந்து அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் உருவாக வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தில்குமார், பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் உரையாற்றினர்.

அமெரிக்கா டெக்ஸாசில் உள்ள ஆலாமோ காலேஜஸ் டிஸ்ட்ரிக்ட் உடன் இணைந்து இத்திட்டத்தின் கீழ், மாங்கரை மற்றும் கொண்டனூர் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு, அங்குள்ள 25 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் இயற்பியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் மூலமாக கல்லூரியில் 7 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

அவர்களுக்கு இன்றைய நிகழ்வில் சான்றிதழ்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மின்னணுவியல் துறைத் தலைவர் பூர்ணிமா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள்  பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் நன்றி கூறினார்.