இன்று பாட்டிலில் தண்ணீர், நாளை காற்று?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு யாராவது தண்ணீர் காசுக்கு விற்பார்கள், அதுவும் பாட்டிலில் அடைத்திருக்கும், கேன்களில் நிரப்பி வேன்களில் எடுத்து வருவார்கள் என்று சொன்னால் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று அது நம் நிஜ வாழ்க்கையில் நடக்கிறது. சென்னை போன்ற பகுதிகளில் லாரித் தண்ணீருக்கு குடத்துடன் ஓடுபவர்களைக் கொண்டு போய் ஒலிம்பிக் போட்டியில் விட்டால் நமக்கு இன்னும் இரண்டு தங்கப் பதக்கம் சேர்த்து கிடைக்கும். அந்த அளவுக்கு தண்ணீர் நிலைமை மோசமாக இருக்கிறது. பல வீடுகளில் பட்ஜெட்டில் குடிக்கிற தண்ணீருக்கு ஒரு தொகை ஒதுக்கி இருக்கிறார்கள். அலுவலகங்களில் சொல்லவே வேண்டாம். அந்த அளவு தண்ணீர் நிலை மாறி விட்டது.

இந்த சூழலில் தான் டில்லியில் ஆக்சிஜன் பார்லர் திறந்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. புலி வருகிறது கதையாக சுத்தமான காற்றை இனி கடையில் தான் வாங்க வேண்டும் என்பது நிஜமாகி விடும் போல் இருக்கிறது. டில்லியில் உள்ள ஆக்சிஜன் பார்லரில் மூன்று வகையான காற்று கிடைக்கிறதாம். சாதாரண மக்களுக்கு ஒன்று, சுவாசக்கோளாறு உள்ளவர்களுக்கு இரண்டாவது, மூன்றாவது விளையாட்டு வீரர்கள் போன்ற ஹெவி வெயிட் சாம்பியன்களுக்கு.

இதற்குக் காரணம் நமது நாட்டின் தலைநகரம் காற்று மாசுபாட்டைப் பொறுத்தவரை கொலை நகரமாக மாறி விடும் போல் இருப்பது தான். சில ஆண்டுகளுக்கு முன்பு காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த இயலாமல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடும் அளவு நிலைமை போனது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்பாகவே மாஸ்க் போட்ட அதிர்ஷ்டம் டில்லி வாசிகளுக்கே உண்டு. கூடவே பஞ்சாப்பில் கோதுமை அறுவடை நடந்தால் மீதி உள்ள பயிரை நிலத்தில் இருந்து அகற்றுவதை விட தீ வைப்பது தான் அவர்களுக்கு எளிதாகவும், பழக்கத்திலும் இருந்து வருகிறது. அங்கிருந்து கிளம்பும் புகை நேராக டில்லி வரை காற்றில் பயணம் செய்து காற்றை மாசுபடுத்துகிறது.

ஏற்கனவே தொழிற் சாலைகள், வாகனங்கள் என்று புகை பாடாய்ப்படுத்தும் போது கூட இந்த புகையும் சேர்ந்து டில்லி வாசிகளை ஒவ்வொரு ஆண்டும் படுத்தி எடுக்கிறது. இது மெல்ல மெல்ல எல்லா நகரங்களுக்கும் பரவி வருகிறது. இந்த காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு போல அனைவராலும் உணரப்படுவதில்லை. ஆனால் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய தொல்லைகளில் இதுவும் முதல் வரிசையில் இருக்கிறது.

பெரிய அளவில் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு மெல்லக் கொல்லும் இந்த துன்பத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சுவாசக் கோளாறு போன்றவை அதிகரித்து ஏற்கனவே கொரோனா வைரஸ் இன்னும் ஒழியாத நிலையில் வேறு எல்லைக்கு கொண்டு சென்று விடும்.

அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும், பள்ளி, கல்லூரி, தொழிலகங்கள் போன்ற அமைப்புகளும், தனிமனிதரும் இணைந்து இதனை எதிர்த்து செயல்பட வேண்டும், தொழிற்சாலைகளில் காற்று மாசுபாட்டை தவிர்த்தல், குறைத்தல், வாகனங்களில் புகை உள்ளிட்ட காற்று மாசுபாட்டை கட்டுக்குள் வைத்தல் என செயல்பட வேண்டும். கூடவே நமது பசுமை காவல்காரர்களான மரங்களை நட்டு பராமரிப்பது பலவகையிலும் இந்த காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தி, தனியார் வாகன எண்ணிக்கையை குறைத்தல் போன்ற பசுமை வழி வாழ்க்கை முறைகள் காற்று மாசுபாட்டை கட்டுக்குள் வைக்க உதவும்.