அப்பாடி, ஸ்கூல் திறக்கப் போகுது!

ஏற்கனவே பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்புகள் திறந்திருந்தாலும், கல்லூரிகள் இயங்கத் தொடங்கி இருந்தாலும், இந்த ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் தான் பள்ளிக் குழந்தைகள் என்று சொல்ல வேண்டும். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக வெகுநாட்களாக வீடுகளில் முடங்கி இருந்த இந்த பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கலாம் என அரசாங்கம் அனுமதி வழங்கி இருக்கிறது. ஆம். தமிழக அரசு வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு தொடங்கி எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் பள்ளி வரலாம் என பச்சைக்கொடி காட்டி இருக்கிறது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டு பாராட்டப்படுகிறது. இந்த அறிவிப்பால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் என மூன்று தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். முடங்கிக் கிடந்த இதயங்கள் மகிழ்ச்சியால் துடிக்கத் தொடங்கி இருக்கின்றன.

ஒரு தற்காலிக ஏற்பாடாக கொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்த ஆன்லைன் கிளாஸ் உதவுமே தவிர உண்மையான கல்வி என்பது செல்போனிலோ, வேறு திரையிலோ அடக்கி விடமுடியாது. எப்போதும் ஆசிரியர் மாணவர்களின் கண்ணோடு கண் பார்த்து சொல்லித்தரும் கல்வியே சிறந்தது என கல்வியாளர்கள் கூறுகிறார்கள். சில ஆன்லைன் கோர்ஸ்கள் தனியாக பயனளிக்கலாம் ஆனால் அது அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தாது.

என்றாலும் அரசாங்கம் இதுகுறித்து பல எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. இப்போது கூட முதலில் ஆறு முதல் எட்டாம் வகுப்ப வரை, பிறகு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளை தொடங்கி இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். அதுவும் ஒருவகையில் உண்மை தான். ஏனென்றால் இன்னும் இந்த வகை குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி போடப்படவில்லை. இன்னொன்று சிறு குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே எதுவும் நடக்கும்.

எனவே இந்த நிலையில் அரசு பல தடுப்பு நடவடிக்கைகள், சோதனைகள் என தொடர்ந்து இயங்க வேண்டும். இப்போதே மாணவர்களின் அட்டெண்டென்ஸ் கட்டாயம் இல்லை, கல்விக் கட்டணம் கேட்டு அழுத்தம் தரக்கூடாது என்று அரசாங்கம் அறிவுறுத்தி இருக்கிறது. இருந்தாலும் இது நடைமுறையில் செயல்படும்படி பள்ளிகளுக்கு அரசு அழுத்தம் தரவேண்டும்.

கூடவே பள்ளியில் இருந்து இடை நின்றவர்களை மீண்டும் முயற்சி செய்து கல்வி கற்க கொண்டு வர வேண்டும். பழைய முறைப்படி தேர்வு மதிப்பெண்களில் இனிவரும் காலத்தில் கொரோனா மார்க்காக பத்து மார்க்கை சேர்த்துப் போடலாம். வழக்கமான நிகழ்வு தவிர கூட்டுப்பிரார்த்தனை மற்றும் கூட்டம் கூடும் விழாக்கள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பள்ளி மாணவ மாணவியருக்கு முன்னுரிமை அளித்து சோதனைகள் நடத்தலாம். பள்ளிக்கு மாணவ, மாணவியரைக் கொண்டு வரும் ஆட்டோ, வேன் டிரைவர்கள் ஆகியோர் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்று உறுதி செய்வது அவசியம்.

பள்ளிகள் நிலைமை அறிந்து நடந்த கொள்ள வேண்டும். பெற்றோர்களும் பல சிக்கல்களுக்கு ஆளாகித்தான் இருக்கின்றனர். பலர் வேலை இழந்திருக்கிறார்கள், பலர் நிதிச் சிக்கலில் இன்னும் இருக்கிறார்கள். என்றாலும் இந்த பேரிடரை எதிர் கொள்வதில் அதுவும் இந்த குழந்தைகள் விஷயத்தில் பெற்றோருக்கு பொறுப்பு கூடுதல் என்றே சொல்ல வேண்டும். குழந்தைகளின் உடல் நலத்திலும், மன நலத்திலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட பல மாதங்களுக்கு அடைத்து வைக்கப்பட்ட நிலையில் தான் குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்கள். அதனால் சில சாதக பாதக நிகழ்வுகள் இருக்கலாம். அவற்றைத் தாண்டி குழந்தைகளின் கல்வியை மனதில் கொண்டு பெற்றோரும், ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகங்களும் இயங்க வேண்டும்.

மக்களின் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் போன்றவற்றை கட்டுப்படுத்தும். இந்த நிலையில் நிலைமையை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்து மூன்றாம் அலையை தவிர்க்கும் நிலையில் இருக்கிறோம். இதற்கு அரசாங்க வழிகாட்டுதலுடன் மக்கள் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். அப்படி அளித்தால் தான் கொரோனா தாக்குதலையும் எதிர்கொள்ள முடியும், கல்வியையும் தொடர முடியும்.