மசினகுடி ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க தீவிரம் காட்டும் வனத்துறை

மசினகுடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க வனத்துறையினர் நான்கு குழுக்களாகப் பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட், மேபீல்டு, மண்வயல், தொரப்பள்ளி, சிங்காரா போன்ற பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களில் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், ஒரு பெண், இரண்டு ஆண்களை புலி ஒன்று அடித்துக் கொன்றது.

இவ்விவகாரம் குறித்து முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா வைத்து ஆய்வு மேற்கொண்டதில், T23 என்ற பெயரில் ஒற்றை புலி தான் இதனைச் செய்வது என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தேவன் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த இந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து புலியை தேடும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டனர்.

புலி வனத்துறையினருக்கு பல முறை தென்பட்டபோதிலும் அடர்ந்த புதர்களில் மறைந்து கொண்டு வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. நேற்று காலை புலி தேவன் எஸ்டேட் பகுதியிலிருந்து சிங்காரா பகுதிக்கு நகர்ந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் புலி சிங்காரா பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த மங்கல பசுவன் என்ற மாதன் பழங்குடியின முதியவரை அடித்துக் கொன்றது. இதனை தொடர்ந்து புலியை சுட்டுப் பிடிக்கக் கோரி பொதுமக்கள் மசினகுடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 80க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள், கால்நடை மருத்துவ குழுவினர், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் புலியை சுட்டு பிடிக்கும் முயற்சி ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சனிக்கிழமை அன்று காலை முதல் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட பயிற்சி முடித்த மோப்ப நாய் உதவியுடன் மசினகுடி வனப்பகுதியில் புலி இருக்கும் இடத்தை தேடி வருகின்றனர்.

சனிக்கிழமை மாலைக்குள் ஆட்கொல்லி புலியை சூழ்நிலைக்கு ஏற்ப சுட்டுப் பிடிக்கப்படும் என்றும், இதற்காக வனத்துறையினர் நான்கு குழுக்களாகப் பிரிந்து மசினகுடி, தெப்பக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதிகளில் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது.

மேலும் மசினகுடி, சிங்காரா பகுதியில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்