பட்டாசு தயாரிப்பு விதிமுறைகளை மீறினால் சிறை தண்டனை!

பட்டாசு தயாரிப்பில் விதிமுறைகள் மீறப்பட்டால் சிறைக்கு தான் செல்ல வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்டாசுகளை வெடிப்பது, உற்பத்தி செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தீர்ப்பு அளித்தது. இதையடுத்து பட்டாசு வெடிப்பதற்கான காலத்தை தினமும் 2 மணி நேரம் என்பதை மாற்றி, காலை 4 மணி நேரமும், மாலையில் 4 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போபண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்திருப்பதாக சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்தது அதில், பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளை மீறி பட்டாசுகளைத் தயாரித்திருக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,’ நாட்டில் எல்லாவற்றிலும் கொண்டாட்டங்கள்தான்; கொண்டாட்டம் மிக முக்கியமானதுதான். கொண்டாட்டம் என்பது மற்றவர்களைத் துன்புறுத்தும் வகையில் இருக்கக் கூடாது. சிபிஐ. வழங்கியுள்ள முதற்கட்ட அறிக்கையில் பட்டாசு உற்பத்தியில் மிகக் கடுமையான விதிமுறை மீறல்கள் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

சிவகாசியில் 4க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில், தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவர்கள் தயாரிக்கும் பட்டாசில் பேரியம், நைட்ரேட் ஆகியவற்றை நச்சு தன்மை வாய்ந்த ரசாயனம் கலந்துள்ளனர். இது முன்னதாக வழங்கப்பட்ட உத்தரவை மீறும் செயல் என்பதால் ஏன் அவர்களின் உரிமத்தை ரத்து செய்து விட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்க கூடாது. இதில் குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் சம்பந்தபட்டவர்கள் சிறைக்கு தான் செல்ல வேண்டும். அதனால் இதுகுறித்து உற்பத்தியாளர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கமாக தெரிவிக்க வேண்டும்,’என்று தெரிவித்தனர். மேலும் விதிமீறல் தொடர்பாக சி.பி.ஐ. இணை ஆணையர் விசாரணை நடத்தி, பட்டாசு தயாரிப்பு விதிமீறல்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை ஆறு வாரத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சி.பி.ஐ.யின் முதற்கட்ட அறிக்கைகளை மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.