டீசல் விலையை குறைத்தால் பொருளாதாரம் சரியாகும் – லாரி உரிமையாளர் சங்கம்

கோவையில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் ஆலோசனைக் கூட்டம் ப்ரூக் பீல்ட் வளாகத்திற்கு அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டததிற்கு பின் கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஏற்று கூலி, இறக்கு கூலி போன்றவைகளை சரக்கு உரிமையாளர்களே கொடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள மாநில அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். டீசல் விலையை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். இதுகுறித்து தமிழக முதலமைச்சரிடம் நேரில் மனு அளித்துள்ளோம்.

திமுக தன் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் படி டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைத்து கொடுக்க வேண்டும்.

வாகனங்களின் பின்னால் ஒட்டப்படும் ஒளிரும் பட்டைகளை மத்திய அரசு அங்கீகரித்த 11 நிறுவனங்களில் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் தமிழகத்தில் இரண்டு நிறுவனங்களிடமிருந்து மட்டுமே ஒளிரும் பட்டைகளை வாங்கச் சொல்லி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இது லஞ்சத்திற்கு வழிவகுக்கும். மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி வரியை அனைத்து பொருட்களுக்கும் விதித்த மத்திய அரசால் பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டுவர மத்திய அரசால் முடியும். டீசல் விலையை குறைத்தால் மட்டும்தான் பொருளாதாரம் சரியாகும்.

போலீசார் வாகன ஓட்டுனர்கள் இடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது அரசிடம் பேசி வருகிறோம். போலீசார் ஆன்லைனில் கேஸ் போடுவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். எனக் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் வெங்கடேஷ், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குருசாமி, செயலாளர் வங்கிலி ஆகியோர் கலந்து கொண்டனர்.