ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக இருதய தினம் கடைபிடிப்பு

கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், உலக இருதய தினம் (29.09.2021) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பிறவி இருதயக் குறைபாடால் பாதிக்கப்பட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளுக்கு, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி, “லிட்டில் ஹார்ட் வாரியர்” என்று சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை இயக்க அலுவலர் ஸ்வாதி ரோஹித், இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் டாக்டர் சுகுமாரன், மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் இருதய வடிவிலான பலூன்களைப் பறக்கவிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள வேலுமணியம்மாள் நினைவு கலையரங்கில், “மாரடைப்பு அவசர சிகிச்சை மற்றும் இருதய நுண்துளை அறுவை சிகிச்சை” குறித்த இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“உலக இருதய தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இருதய நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதற்கு முன்பு வயதானவர்களுக்கு அதிகளவில் ஏற்பட்ட இருதய பாதிப்பானது, தற்போது இளைஞர்களையும் குறிப்பாகக் குழந்தைகளையும் தாக்குவது கவலையளிக்கிறது.

இது பிறவி இருதய குறைபாடு எனப்படுகிறது. குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் நிச்சயம் குணப்படுத்த முடியும். 1000 குழந்தைகளில் 9 பேருக்கு இப்பாதிப்பு ஏற்படுகிறது. அந்தவகையில் ஆண்டுக்கு இந்தியாவில் 2 லட்சம் குழந்தைகள் பிறவி இருதய குறைபாட்டுடன் பிறப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நம்முடைய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கான இதய நோய் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிலிப்பைன்ஸ், இலங்கை, கொலம்பியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இருதய நோய் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்”. எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து இருதய நோய் மருத்துவத்துறைத் தலைவர் டாக்டர் எஸ்.மனோகரன், “மாரடைப்புக்கான அவசர சிகிச்சை” என்ற தலைப்பிலும், தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். எஸ்.தியாகராஜ மூர்த்தி, “இருதய நுண்துளை அறுவை சிகிச்சை” என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விஜய் டி.வி. நீயாநானா நிகழ்ச்சி தொகுப்பாளரும், சொற்பொழிவாளரும், ஊடகவியலாளருமான கோபிநாத் சந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் யூடியூப் மற்றும் முகநூல் ஆகிய சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.