ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதய தின கருத்தரங்கு: வாழ்க்கை எளிதானதே – கோபிநாத்

உலக இருதய தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பாக மாரடைப்பு அவசர சிகிச்சை மற்றும் இருதய சிறுதுளை அறுவை சிகிச்சை பற்றிய இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் கலந்து கொண்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் டீன் மற்றும் மருத்துவ இயக்குனர் சுகுமாரன் வரவேற்பு உரை ஆற்றினார்.

அவசர கால மாரடைப்பு குறித்த பல கருத்துக்களை இருதய நோய் துறைத்தலைவர் மனோகரன் கூறும்போது: இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்ல கூடிய ரத்த குழாய்களில் வெடிப்பு ஏற்படுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.  மேலும் இருதயத்திற்கு தேவையான மின்சாரத்தை அதுவே உற்பத்தி செய்து கொள்கிறது. மின்சார உற்பத்தி தடைபடும்போது தீடிர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுகிறது.

ரத்த் ஓட்டம் தடைப்பட்ட 20 நிமிடத்தில் இருதயம் பழுதடைந்து விடும். ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம், உடல் உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பு இன்று 30 அல்லது  40 வயதுக்கு இடைப்பட்டவர்களை அதிகளவில் தாக்குகிறது. மேலும் குடும்பத்தில் வருவாய் ஈட்டக்கூடிய நபர் இதனால் பாதிக்கப்படும் போது  அக்குடும்பத்தை சேர்ந்தவர்களை நிலை குலைய செய்கிறது.

மேலும் மாரடைப்பிற்கு மன உளைச்சல் முக்கிய காரணமாக உள்ளது. கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது, புகை மது போன்ற பழக்கங்களை கைவிடுதல், உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி  போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.  வரும்முன் காப்பதே சிறந்தது என்பதன் அடிப்படையில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் தியாகராஜ மூர்த்தி பேசுகையில்: 30 வருடத்திற்கு முன்பு வரை இருதய அறுவை சிகிச்சை என்றால் பயம் ஏற்படும். ஆனால் இப்பொழுது மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் இருதயம் சார்ந்த பிரச்சினைகளை நுண்துளை சிகிச்சையின் மூலம் சரி செய்ய வாய்ப்பு உள்ளது.  இம்முறையினால் அதிகளவு ரத்த வெளியேற்றமும் ஏற்படாது எனப் பேசினார்.

குழந்தைகள் இருதய நல மருத்துவர் சதாசிவம் கூறுகையில்: இருதய நோய் எல்லா வயதினரையும் பாதிப்பதோடு பிறந்த குழந்தைகளை கூட பாதிக்கிறது எனவும் மருத்துவ தொழில்நுட்ப வசதியினால் கருவில் உள்ள குழந்தையின் இருதய செயல்பாட்டில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் எனக் கூறினார்.

மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் சில வழிமுறைகள் பற்றி சிறப்பு விருந்தினர் கோபிநாத் பேசுகையில்:  உலகில் 50 % இருதய நோய் பாதிப்புகள் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கம் என பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஒருவருக்கு ஏற்படும் மன அழுத்தமும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.

வாழ்க்கை குறித்த எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பதோடு எதிர்காலம் குறித்த கற்பனைகள் மனதை பலவீனப்படுத்துகிறது.  நல்ல எண்ணங்களையும், கருத்துகளையும் கொண்டவர்களை நம்மைச் சுற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். சுற்றியுள்ள மனிதர்கள் சரியில்லை என்றால் பிரச்சினை ஏற்படக்கூடும். நல்ல சிந்தனையை ஏற்படுத்தக்கூடிய நண்பன் அவசியம். வாழ்க்கை எளிதானதே, தேவையற்ற சிந்தனைகளால் நாமே சிக்கல் ஆக்கி கொள்கிறோம்.

வாழ்வில் நம்பிக்கையற்ற மனநிலையையும் உலகின் மீதான நிச்சயமற்ற தன்மையையும் சிலர் கொண்டுள்ளதால் எப்பொழுதும் நம்மை சுற்றி பதட்டமான ஒரு சூழலையே வைத்துக் கொள்கிறோம். அதனால் நிதானம் இல்லாமல் போகிறது.

இந்த உலகம் நம்மை பற்றி என்ன நினைக்கிறது என்பதிலேயே கவனம் செலுத்தி அதிலே நேரத்தை கடத்துகிறோம்.  டிஜிட்டல் உலகில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பதற்காக நேரத்தை செலவளியுங்கள். மேலும் சமூக ஊடகமும் ஒருவித பதட்ட நிலையை நம்முள் ஏற்படுத்துகிறது. மனிதன் மற்றவர்களுடன் செலவிடும் நேரத்தை இன்றைய சமூக ஊடக தொழில்நுட்பங்கள் சுருக்கி விட்டது.  சம்பாதிக்கும் பணம் மட்டுமே குடும்பத்திற்கு மகிழ்ச்சியே கொடுத்துவிடாது, அவர்களுக்கான நேரத்தை ஒதுக்கி செலவிடும்போதுதான் சுற்றியுள்ளவர்களும் மகிழ்வார்கள் எனப் பேசினார்.