யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி: கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சாதனை

கோவையைச் சேர்ந்த ரஞ்சித் என்ற மாற்றுத்திறனாளி யு.பி.எஸ்.சி தேர்வில் அகில இந்திய அளவில் 750 வது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ரஞ்சித் பிறவிலேயே காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது தந்தை ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் அமிர்தவள்ளி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார்.

தனது நடுநிலை பள்ளிப்படிப்பை சிங்காநல்லூரில் உள்ள கஸ்தூரிபா சிறப்பு பள்ளியில் பயின்றார். 11 மற்றும் 12ஆம் வகுப்புகளை என்.ஜி.ஆர் மேல்நிலை பள்ளியில் பயின்றார். இதனைத் தொடர்ந்து பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவை படித்து முடித்தார்.

அதன்பின், தனியார் நிறுவனத்தில் ஓராண்டு பணி புரிந்தார். பிறகு 2017 ஆம் ஆண்டு முதல் வங்கி போட்டித் தேர்வுக்கு படிக்க தொடங்கினார். அடுத்த ஓராண்டிலேயே வங்கி தேர்வை விட்டுவிட்டு, யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்றார்.

பயிற்சி முடித்து ரஞ்சித் தனது யுபிஎஸ்சி தேர்வை எழுதினார். இந்த முதல் தேர்விலேயே அவர் அகில இந்திய அளவில் 750 இடத்தைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ரஞ்சித்தின் இந்த சாதனைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.