சைக்கிள் ஓட்டியபடி ஒற்றை கையில் சிலம்பம் சுற்றும் சிறுவன்!

ஒற்றை கையில் சிலம்பம் சுற்றியபடி 20 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி கோவையை சேர்ந்த பள்ளி மாணவர் நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்திரஜித். சிவபிரகாஷ், ரம்யா தம்பதியினரின் மகனான இவர், தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மை கராத்தே இண்டர்நேஷனல் சிலம்பம் பயிற்சி பள்ளியில் மாணவன் இந்திரஜித் சிறு வயது சின்னதம்பி என்ற பயிற்சியாளரிடம் சிலம்பம் கற்று வருகிறார்.

இந்நிலையில் சிலம்பம் சுற்றுவதில், உலக சாதனை படைக்க விரும்பிய மாணவர் இந்திரஜித் 20 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டியபடியே சிலம்பம் சுற்றி நோபள் புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். முன்னதாக காளப்பட்டியில் தனது சாதனை பயணத்தை தொடங்கிய மாணவன் இந்திரஜித், விளாங்குறிச்சி, கோவில்பாளையம் பகுதியாக அன்னூர் வரை சுமார் 20 கிலோமீட்டர் சிலம்பத்தை சுற்றியபடி சைக்கிள் ஓட்டி சென்றார்.

இவரது சாதனை நிகழ்ச்சியை தீர்ப்பாளர் அரவிந்த் கண்காணித்து தேர்வு செய்தார். நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவன் இந்தரிஜித்திற்கு நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.