நேரு கல்வி குழுமம் மற்றும் பெடலர்ஸ் சார்பில் சைக்கிள் சாம்பியன்ஷிப் பந்தயம்

நேரு கல்வி குழுமம் மற்றும் கோவை பெடலர்ஸ் அமைப்பின் சார்பில் கோவையில் மேடு பள்ளம் மற்றும் சமதள போன்ற மைதானத்தில் சைக்கிள் ஓட்டும் (மவுண்டன் டெர்ரைன் பைக்) சாம்பியன்ஷிப் பந்தயம் ( 19.09.2021) நடைபெற்றது.

இது குறித்து கோவை நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி/செயலாளர் மற்றும் கோவை பெடலர்ஸ் அமைப்பின் தலைவருமான கிருஷ்ண குமார் கூறியதாவது: பந்தயமானது கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள பாலத்துறையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் 10, 14 மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோர் என மூன்று பிரிவினர்களாக மாணவ மாணவியர்கள் பிரிக்கப்பட்டு பந்தயங்கள் நடைபெற்றன. இந்த போட்டியில் மொத்தம் 200 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் இனி வரும் நாட்களில் நடைபெறும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த சைக்கிள் பந்தயத்தை கோவை ஐ.என்.எஸ். அக்ரானியின் கமான்டிங் அதிகாரி, கமோடோர் அசோக் ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியன் இரயில்வேயின் தேசிய தடகள பயிற்சியாளரும் முன்னாள் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவருமான கே. எஸ். முகமது நிஜாமுதீன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவிற்கு நேரு கல்வி குழமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், செயலாளரும் கோவை பெடலர்ஸ் அமைப்பின் தலைவருமான கிருஷ்ண குமார் முன்னிலை வகித்தார். கோவை பெடலர்ஸ் அமைப்பின் செயலாளர் விக்னேஷ் குமார் பந்தயத்திற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.